Published : 17 Nov 2021 01:27 PM
Last Updated : 17 Nov 2021 01:27 PM

அடுத்த 25 ஆண்டுகள் மிக முக்கியமானவை; நாடாளுமன்றவாதிகள் கடமையை உணர்ந்து பணியாற்றுங்கள்: பிரதமர் மோடி அறிவுறுத்தல்

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை, இதற்கு நாடாளுமன்றவாதிகள் கடமை கடமை கடமை என்ற ஒரே தாரக மந்திரத்தை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 82-வது அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டின் தொடக்க அமர்வில் இன்று காணொலி மூலம் உரையாற்றினார். மக்களவைத் தலைவர், இமாச்சலப்பிரதேச முதல்வர், மாநிலங்களவை துணைத் தலைவர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்றவர்கள் இடையே உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது:

இந்தியாவுக்கு ஜனநாயகம் வெறும் நடைமுறை அல்ல. இந்திய வாழ்க்கையின் அங்கமான ஜனநாயகம் நமது இயல்பிலேயே ஊறியது. வரும் ஆண்டுகளில், அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில் நாட்டை புதிய உச்சத்திற்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும்.

அனைவருக்குமான முயற்சியின் மூலமே இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற முடியும். ஜனநாயகத்தின் கூட்டாட்சி முறையில், நாம் அனைவருக்குமான முயற்சி பற்றி பேசும்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களின் பங்கு இதற்கு பெரிய அடிப்படையாகும்.

வடகிழக்குப் பகுதியின் மிக நீண்டகால பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருந்தாலும் அல்லது பல பத்தாண்டுகளாக தடைப்பட்டிருந்த அனைத்துப் பெரிய மேம்பாட்டுத் திட்டங்களை முடிப்பதாக இருந்தாலும், கடந்த ஆண்டுகளில் இது போன்ற பல பணிகள் நாட்டில் முடிக்கப்பட்டுள்ளன. அனைவரது முயற்சியாலும் இது செய்து முடிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டம் அனைவருக்குமான முயற்சிக்கு மிகப் பெரிய உதாரணம்.

நமது சட்டப்பேரவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும் இந்தியவின் இயல்பாக இருக்க வேண்டும். ஒரே பாரம் உன்னத பாரம் என்ற இந்திய உணர்வை வலுப்படுத்த அரசு கொள்கைகளையும், சட்டங்களையும் வகுக்க வேண்டும்.

மிக முக்கியமாக அவையில் நமது தனிப்பட்ட நடத்தை இந்திய மாண்புகளுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். நம் அனைவருக்கும் இது பொறுப்பாகும்.

நமது நாடு முற்றிலும் பன்முகத்தன்மைக் கொண்டது . ஆயிரக்கணக்கான ஆண்டு வளர்ச்சியில் பன்முகத்தன்மைக்கு மத்தியில் புனிதமான உடைக்க முடியாத ஒற்றுமை என்ற உணர்வை அளிக்க வேண்டும். பிரிக்க முடியாத இந்த ஒற்றுமை, நமது பன்முகத்தன்மையை செழுமையாக்கி பாதுகாக்கிறது.

அவையில் ஆண்டுக்கு 3-4 நாட்களை ஒதுக்கி, மக்கள் பிரதிநிதிகள் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற தங்கள் வாழ்க்கையின் அம்சத்தை நாட்டுக்கு கூற முன்வர வேண்டும் . இதர மக்கள் பிரதிநிதிகள், இதர சமுதாய மக்கள் ஆகியோரிடம் கற்க வேண்டியது ஏராளமாக உள்ளது.

தரமான விவாதங்களுக்காக தனி நேரத்தை ஒதுக்கலாமா என்பதை பரிசீலிக்கலாம். அத்தகைய விவாதங்களில் கண்ணியமான பாரம்பரியங்கள் மற்றும் அதன் தீவிரத்தன்மை முழுமையாகப் பின்பற்றப்பட வேண்டும். யார் மீதும் அரசியல் ரீதியான அவதூறுகளை கூறக் கூடாது. ஒரு வகையில் அது அவையின் ஆரோக்கியமான நேரமாகவும், ஆக்கப்பூர்வமான தினமாகவும் இருக்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை தளம் என்ற யோசனையை முன்வைக்கிறேன். நமது நாடாளுமன்ற நடைமுறைக்கு தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை தருவதாக மட்டுமில்லாமல் நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கப் பாடுபடுவதாக அந்த இணையதளம் இருக்க வேண்டும்.

இந்தியாவுக்கு அடுத்த 25 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை. இதற்கு நாடாளுமன்றவாதிகள், கடமை கடமை கடமை என்ற ஒரே தாரக மந்திரத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x