

டெல்லியில் மறுஉத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கவும், அரசு, தனியார் நிறுவனங்கள் 50% ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கவும் காற்று தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை பின்னிரவில் இந்த உத்தரவு வெளியானது.
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்தது.
இதனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று (செவ்வாய்) பின்னிரவில் காற்று தர நிர்ணய ஆணையம் பிறப்பித்த உத்தரவில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரங்களில் மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளை மூடிவிட்டு ஆன்லைன் வகுப்புகளுக்குத் திரும்புமாறு அறிவித்துள்ளது. அதேபோல் அண்டை மாநிலங்களான ஹரியாணா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேச மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் 50% பேரை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
வரும் 21 ஆம் தேதி வரை கட்டுமானப் பணிகள், கட்டிடங்கள் இடிப்புப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் டெல்லியில் உள்ள 11 அனல் மின் நிலையங்களில் 5 மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நவம்பர் 21 ஆம் தேதி வரை அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு வரும் ட்ரக்குகளைத் தவிர மற்ற டிரக்குகளை டெல்லிக்குள் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல், 10 ஆண்டுகள் பழமையான டீசல் வாகனங்கள் இனி பயன்படுத்த அனுமதி கிடையாது.
முன்னதாக நேற்று நடந்த அவசரக் கூட்டத்தில், வார இறுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தவும், ஒரு வாரத்திற்கு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணி செய்ய உத்தரவிடவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தது.
டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் காற்றின் தரம் 379 என்றளவில் உள்ளது:
டெல்லியில் இன்று (நவ 17) காற்றின் தரம் 379 என்றளவில் உள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கீட்டின்படி பூஜ்ஜியம் முதல் 50 வரையிலான மாசு காற்றின் தரம் உயர்வாக இருப்பதையும், 51 முதல் 100 வரையிலான மாசுபாட்டின் அளவு காற்றின் தரம் திருப்திகரமாக இருப்பதையும் 101 முதல் 200 அளவிலான மாசுபாட்டின் அளவு காற்றின் தரம் மிதமானதாக இருப்பதையும், 201 முதல் 300 மோசமான தரத்தையும், 401 முதல் 500 அபாயகரமான தரத்தையும் உணர்த்துகிறது.