

ஒடிசா மாநிலத்தில் கோரபுட், நபராங்பூர் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த இரு மாவட்டங்களில் உள்ள குமுடி மற்றும் கண்டசரகுடா பஞ்சாயத்துகளின் குறுக்கே இந்திராவதி என்ற ஆறு பாய்கிறது. இதனால் மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் படிப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்த ஆற்றை கடந்து மறுகரைகளுக்கு செல்கின்றனர். நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்டோர் இவ்வாறு நதிகளை கடந்து செல்வர். இவர்களை குமுடி பஞ்சாயத்தை சேர்ந்த ஜெயதேவ் பத்ரா என்பவர் தான், தனது படகின் மூலமாக இரு கரைகளுக்கும் கொண்டு சென்று வந்தார்.
இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட புயலில் ஜெயதேவ் பத்ராவின் படகு சேதமானது. இதனால் படகு போக்குவரத்து முற்றிலுமாக நின்று போனது. இதன் காரணமாக, இரு கிராமத்தைச் சேர்ந்த மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்ட ஜெயதேவ் பத்ரா மிகவும் வேதனை அடைந்தார். இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என உறுதியேற்றார்.
ஏற்கனவே இந்த இரு கிராமங்களுக்கு இடையே பாலம் அமைக்க கோரியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசை நம்பி இனி பயனில்லை என உணர்ந்த ஜெயதேவ் பத்ரா, தனது சொந்த செலவிலேயே பாலம் அமைக்க முடிவு செய்தார். அதன்படி, தனக்கு சொந்தமாக இருந்த ஒரே கரும்புப் பண்ணையை வங்கியில் அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தில் தற்போது மூங்கில் பாலம் அமைத்திருக்கிறார். இந்த பாலத்தில் இப்போது இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மகிழ்ச்சியாக சென்று வருகின்றனர்.
இதுகுறித்து ஜெயதேவ் பத்ரா கூறியபோது, “நாள்தோறும் ஏராளமானோர் தங்கள் அத்திவாசியப் பணிகளுக்காக இந்த ஆற்றை கடக்க வேண்டியுள்ளது. படகு சேதமடைந்ததால் புதிய பாலத்தை கட்டுவதற்கு நிதி திரட்டுமாறு இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களிடமும் கோரிக்கை விடுத்தேன். ஆனால், இந்த முயற்சி கைக்கூடவில்லை. அதனால், நானே எனது சொந்த செலவில் இந்த பாலத்தை கட்டி முடித்திருக்கிறேன். இதற்கு ஒன்றரை லட்சத்துக்கும் மேல் செலவாகியுள்ளது. படகு சேதமடைந்ததால் எனது தொழில் பாதிக்கப்பட்டு நஷ்டம் அடைந்திருக்கிறேன். இருந்தபோதிலும், மக்களுக்காக இந்தப் பணியை செய்து முடித்தேன்" என்றார்.
இரண்டு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காக அரசு கூட பாலம் அமைக்க முன்வராத சூழலில், சாதாரண படகுக்காரர் ஒருவர் தமது சொந்த செலவில் பாலம் அமைத்திருப்பதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.