Published : 17 Nov 2021 03:05 AM
Last Updated : 17 Nov 2021 03:05 AM

உத்தரபிரதேச மாநிலம் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் குறித்து 10 பொய்கள்: அகிலேஷ் யாதவின் முகத்திரையைக் கிழிக்கும் உண்மைகள்

பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தின் சவுட்சராய் கிராமத்தில் தொடங்கி, ஹைதாரியா கிராமத்தில் முடிவடைகிறது. 341 கிலோமீட்டர் நீளம் கொண்டது இந்த அதிவேகச் சாலைத் திட்டம். ரூ.22,500 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது உ.பி.யின் லக்னோ,பாராபங்கி, அமேதி, சுல்தான்பூர், அயோத்யா, அம்பேத்கர்நகர், ஆசம்கர், மாவ், காஜிப்பூர் ஆகிய 9 மாவட்டங்களை இணைக்கிறது. சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆசம்கர் மக்களவைத் தொகுதியிலிருந்துதான் மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 17-வது மக்களவைக் கூட்டத் தொடர் நடக்கும்போது அவர் 36 சதவீத நாட்கள் மட்டுமே அவர் நாடாளுமன்றத்துக்குச் சென்றுள்ளார்.

சமீபத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் குறித்து தொலைக்காட்சிக்கு அகிலேஷ் யாதவ் பேட்டியளித்தார். அப்போதுமுன்னுக்குப் பின் முரணான பல தகவல்களை அவர் தெரிவித்ததாக பாஜகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். திட்டம் தொடர்பாக அவர் 10 பொய்களை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அவை அனைத்தும் ஆதாரமற்றவை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு நிரூபித்துள்ளது.

முதலில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது சமாஜ்வாதி கட்சியின் திட்டம் என்றும், பாஜக அரசு அந்தத் திட்டத்துக்கு உரிமை கொண்டாடுகிறது என்றும்அகிலேஷ் தெரிவித்தார். ஆனால் இந்தத்திட்டமானது சமாஜ்வாதி ஆட்சியில் வெறும் காகித அளவிலேயே இருந்துள்ளது. யோகி ஆதித்யநாத் அரசுதான் இதை நிறைவேற்றியுள்ளது.

இரண்டாவதாக பூர்வாஞ்சல் திட்டத்துக்கு தனது அரசுதான் டெண்டர் கோரியது என்றும் அதை யோகி ஆதித்யநாத் அரசு ரத்து செய்துவிட்டது என்றும் அகிலேஷ் தெரிவித்தார். ஆனால் திட்டத்துக்கு 25% நிலங்கள் கூட கையகப்படுத்தாத நிலையில் அகிலேஷ் அரசு டெண்டர் கோரியது என்பதே உண்மை.

நெடுஞ்சாலை பொறியாளர்கள் உருவாக்கிய இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ் (ஐஆர்சி) அமைப்பின் விதிகளின்படி நெடுஞ்சாலையின் நடுவே 12 முதல் 14 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் அதைவிட கூடுதலான இடைவெளி தேவை என்ற ரீதியில் அகிலேஷ் அந்த பேட்டியில் தெரிவித்தார். ஐஆர்சி விதிகளின்படியே நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக பூர்வாஞ்சல் நெடுஞ்சாலையில் வாகன சவாரி தரம் சரியில்லை என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார். ஆனால் சவாரி தரம் சிறப்பாக உள்ளது என்றும், ஐஆர்சி வெளியிட்டுள்ள விதிகளின்படியே சவாரி தரம் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக இந்த சாலையில் மண் அரிப்பைத் தடுக்க சிலிக்கான் ஷீட்டுகள் பயன்படுத்தவில்லை என அகிலேஷ் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அதை விட முன்னேறிய தொழில்நுட்பமான ஜியோசெல் தொழில்நுட்பம் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது

ஆறாவதாக டவுன் பஞ்சாயத்துகள், கிராமங்களை இணைக்க அணுகு சாலைகள் (சர்வீஸ் சாலைகள்) இல்லை என்று அகிலேஷ் கூறியுள்ளார். ஆனால் திட்டத்தில் 397 கிலோமீட்டர் தூரத்துக்கு அணுகு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழியிலும், பல இடங்களில் இரு புறங்களிலும் இந்த அணுகுசாலைகள் அமைந்துள்ளன.

ஏழாவதாக பல இடங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கப்படவில்லை என அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்தத் திட்டத்தில் போதிய இடைவெளியில் 16 இடங்களில் பயணிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

8-வதாக சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் தரமானதாக இல்லைஎன்று அகிலேஷ் புகார் கூறியுள்ளார். ஆனால் இரவு நேரங்களிலும் வாகனங்களில் செல்லும் மக்களின் கண்களுக்கு சாலைகள் நன்கு புலப்படும் வகையில் விளக்குகள் அமைந்துள்ளன. பொது வசதி மையங்கள், பெரிய பாலங்கள், சிறுபாலங்கள், சுரங்கப்பாதை, சுங்கச்சாவடிகளில் சிறப்பான தரத்தில் விளக்குகள் வசதி அமைந்துள்ளது.

9-வதாக இந்தத் திட்டத்தை அனுபவம் இல்லாத நிறுவனங்களிடம் ஒப்படைத்ததாக அகிலேஷ் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் வெளிப்படையான, நியாயமான இ-டெண்டரிங் முறையில்காயத்ரி புராஜக்ட்ஸ், ஜிஆர் இன்பிரா புராஜக்ட்ஸ் ஆப்கோ இன்பிராடெக், பிஎன்சி இன்பிராடெக், ஓரியண்டல் ஸ்டிரக்சுரல் இன்ஜினீயர்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் திட்டம் ஒப்படைக்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்துமே சிறந்த நிறுவனங்கள் என்று பெயர் வாங்கியவை. நாடு முழுவதும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதித்திட்டங்களை இந்த நிறுவனங்கள் உருவாக்கியுள்ளன.

10-வதாக தனது அரசு குறிப்பிட்ட அளவில் திட்டம் கட்டமைக்கப்படாமல் தரம் குறைந்த அளவில் அமைக்கப்பட்டுள்ளதாக அகிலேஷ் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிறந்த இன்ஜினீயரிங் டிசைன்களை கொண்டு திட்டம் அற்புதமானமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. ஆக்ரா - லக்னோஎக்ஸ்பிரஸ்வே திட்டத்தை விட, பூர்வாஞ்சல் திட்டம் சிறப்பான முறையில் வந்துள்ளது. இதன்மூலம் அகிலேஷ் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்றும் தேர்தல் நேரத்தில் தவறான தகவல்களை மக்களிடையே பரப்ப அகிலேஷ் முயற்சி செய்கிறார் என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x