Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

உத்தரபிரதேசத்தின் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது: பூர்வாஞ்சல் அதிவேகச்சாலை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பெருமிதம்

லக்னோ

பூர்வாஞ்சல் அதிவேகச்சாலை (எக்ஸ்பிரஸ்வே) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது உத்தரபிரதேசத்தின் புதிய சகாப்தம் தொடங்கி உள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து, மத்தியிலும் உ.பி.யிலும் ஆளும் பாஜக அரசு அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறது. மேலும் பல வளர்ச்சித் திட்டங்களையும் அந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அண்மையில் உ.பி.யில் குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர்மோடி திறந்து வைத்து பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் நேற்று பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்திலுள்ள சவுட்சராய் கிராமத்தில் தொடங்கி, ஹைதாரியா கிராமத்தில் முடிவடைகிறது. 341 கிலோமீட்டர் நீளம் கொண்டது இந்த அதிவேகச் சாலைத் திட்டம். ரூ.22,500 கோடி மதிப்பீட்டில் 3 ஆண்டுகளில் பூர்வாஞ்சல் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இதேசாலையில் குரேபர் என்ற இடம் அருகே போர் விமானங்கள் அவசர காலத்தில் இறங்குவதற்காக 3.2 கி.மீ. நீளத்துக்கு நெடுஞ்சாலையை ஒட்டி விமான ஓடு பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உ.பி.யின் ஆக்ரா-லக்னோ நெடுஞ்சாலையில் இதேபோல் போர் விமானங்கள் அவசர காலத்தில் இறங்குவதற்கான விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைகளில் விமான ஓடுபாதைகளைக் கொண்ட முதல் மாநிலமாக உ.பி. பெருமை கொள்கிறது.

உ.பி.யின் சுல்தான்பூர் மாவட்டத்தின் கார்வால்கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின்போது திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே திட்டமானது உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கிறது. இந்த திட்டத்துக்கு நான்அடிக்கல் நாட்டியபோது, இந்தசாலையில் நான் போர் விமானத்தில் வந்திறங்குவேன் என ஒருபோதும் நினைத்தது இல்லை. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் பிரிட்டிஷாருக்கு சவால் விடுத்த மக்கள் ஆவர்.இந்த நெடுஞ்சாலை ஏழை, நடுத்தர மக்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பயன் அளிக்கும்.

கடந்த 2014-ல் ஆண்டு நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, இங்கிருந்த அரசு (அகிலேஷ் யாதவ் அரசு) வளர்ச்சி திட்டங்களை எப்படி புறக்கணித்தது என்பதை நினைத்து பார்க்கும் போது எனக்கு வேதனை அளிக்கிறது.

இந்த திட்டத்தின் மூலம் உ.பி.யில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. உ.பி. அரசின் செயல் திறனை சந்தேகித்தவர்கள் தற்போது சுல்தான்பூர் வந்து பாஜகஅரசின் வலிமையைக் காணலாம். சாதாரணமாக இருந்த இந்த இடம்இப்போது நவீன வடிவில் எக்ஸ்பிரஸ் சாலையாக மாறியுள்ளது.

சாலையில் இறங்கிய போர் விமானம்

இந்த மாவட்டத்தில்தான் பகவான் ஹனுமான், ராட்சசன் கல்னேமியைக் கொன்றார். அந்தப் பகுதிமக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மக்கள் சேவையில் பாஜகஎன்றென்றும் சிறப்பான பணிகளைத் தந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைப்பதற்காக பிரதமர் மோடி,போர் விமானத்தில் வந்து சாலையில் தரையிறங்கினார். இந்திய விமானப்படையின் ஐஏஎஃப் சி-130 ஹெர்குலிஸ் போர் விமானத்தில் குரேபர் விமான ஓடுபாதையில் வந்து தரை இறங்கினார். இதனைத் தொடர்ந்து விழா மேடைக்கு பிரதமர் மோடி கார் மூலம் சென்றார்.

குரேபர் விமான ஓடு பாதை திறக்கப்பட்டதை முன்னிட்டு மிராஜ் 2000, ஹெர்குலிஸ், சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இவற்றை பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் மேடையில் இருந்து கண்டுகளித்தனர்.

இங்கு அவசர காலத்தில் போர் விமானங்கள் இறங்குவதற்காக 3.2 கி.மீ. நீளத்துக்கு சர்வதேச தரத்தில் விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x