

உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் உத்தேச பட்டியலை அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இடம்பெற்றுள்ளனர்.
உலகளவில் அறிவியல், திரைப்படம், விளையாட்டு, தொழில்நுட்பம், நிறுவனங்களின் தலைவர்கள் என செல்வாக்குடன் வலம் வரும் 100 பிரபலங்களை தேர்ந்தெடுத்து, ‘டைம்ஸ்’ இதழ் ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இறுதி பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.
முன்னதாக உத்தேச பட்டியலில் 127 பிரபலங்களின் பெயர்களை டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி, சானியா மிர்சா, பிரியங்கா சோப்ரா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு பட்டியலிலும் மோடி இடம்பெற்றிருந்தார். அவருடைய வாழ்க்கை வரலாறு பற்றி அப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே எழுதி தந்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து 2-வது ஆண்டாக பட்டியலில் மோடி பெயர் இடம்பெற்றுள்ளது.
செல்வாக்குள்ள பிரபலங்களின் இறுதி பட்டியலை தேர்வு செய்வதற்கு இணையதளத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படுகிறது. அதில், தாங்கள் விரும்பும் பிரபலத்தை தேர்ந்தெடுக்க வாசகர்களை டைம்ஸ் பத்திரிகை கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களுடைய ஆன்லைன் ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 100 பிரபலங்களை டைம்ஸ் ஆசிரியர் குழு தேர்ந்தெடுத்து இறுதி பட்டியலை வெளியிடும்.
இப்போது வெளியாகி உள்ள உத்தேச பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், போப் பிரான்சிஸ், வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன், மலாலா, ரஷ்ய அதிபர் புதின், மியான்மர் ஜனநாயக கட்சி தலைவர் ஆங்சான் சூச்சி, மைக்ரோ சாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா உட்பட 127 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.