

பிஹார் துணை முதல்வர் ரேணு தேவி காரை மாணவர்கள் வழிமறித்த நிலையில் அவர் ஆவேசப்பட்டு வசை பாடினார்.
பாட்னா அருகே ரேணு தேவியின் சட்டப்பேரவைத் தொகுதியான பெட்டியா உள்ளது. இங்கு தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள் குழு கல்லூரிக்கு வெளியே தங்கள் தேர்வு மையத்தை சம்பாரனுக்கு மாற்றக் கோரி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது.
பிஹாரின் பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான ரேணு தேவி அப்போது அங்கு காரில் வந்துள்ளார். அச்சமயம், கோரிக்கைகளை வலியுறுத்தி துணை முதல்வரின் காரை மாணவர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனால் கோபமுற்ற துணை முதல்வர் காரில் இருந்துகொண்டே கல்லூரி மாணவர்களைத் திட்டத் தொடங்கினார். இது வீடியோவில் பதிவானது. இதில் மாணவர்களை மோசமாக இந்தி மொழியில் துணை முதல்வர் ஆவேசமாகத் திட்டும் காட்சி பதிவாகியுள்ளது.
துணை முதல்வர் சம்பவ இடத்துக்கு வந்ததும், அவரது காரை மாணவர்கள் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். காரைத் தடுத்து நிறுத்தினர். அப்போதுதான் அவர் வசை பாடினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.