Last Updated : 16 Nov, 2021 03:48 PM

 

Published : 16 Nov 2021 03:48 PM
Last Updated : 16 Nov 2021 03:48 PM

குஜராத்தில் சாலையோர அசைவ உணவு கடைகளுக்குத் தடை; தள்ளுவண்டிகள் பறிமுதல்: வியாபாரிகள் வேதனை

குஜராத் மாநிலத்தில் சாலையோர அசைவ டிபன் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெருவோர வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சாலையோர அசைவ உணவு வண்டிக் கடைகளை தடை செய்யும் குஜராத் அரசின் உத்தரவை ராஜ்கோட், வதோதரா மற்றும் பாவ்நகர் மாநகராட்சிகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவந்துள்ளன.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகம் இன்று சாலையோர கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டது. இதற்காக மாநகராட்சி டிரக்குகள் சாலைகளைக் கண்காணித்து நகரை வலம் வந்தன. சாலையோர அசைவ டிபன் வண்டிக் கடைகள் பறிமுதல் செய்து டிரக்கில் ஏற்றப்பட்டன.

அகற்றக் காரணம்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் 100 மீட்டர் சுற்றளவில் அசைவ உணவுகளை சிற்றுண்டி கடைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உரிமம் பெற்ற மற்றும் உரிமம் பெறாத தெரு வியாபாரிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தெருவோர கடை வியாபாரி ராகேஷ்

மேலும் இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பொது இடங்களில் இறைச்சி மற்றும் மீன் உணவுகள் சிற்றுண்டிகளாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்வதால், மக்கள் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த அசைவக் கடைகளால் சாலைகளில் போக்குவரத்துப் பாதிக்கப்படுகிறது, முக்கியமாக மக்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்படுகிறது'' என்று தெரிவித்தனர்.

சாலையோரங்களில் உள்ள அசைவ சிற்றுண்டிக் கடைகளை அகமதாபாத் மாநகராட்சி தடை செய்ததால், வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று தெருவோர வியாபாரிகள் அஞ்சுகின்றனர்.

இதில் பாதிக்கப்பட்ட ராகேஷ் என்பவர் கூறுகையில் "அரசின் இந்த உத்தரவால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தெருவோர கடைகளை தடை செய்யும்போது, ஹோட்டல்களை மட்டும் அனுமதிப்பது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்கிறது. அங்கிருந்து அசைவ உணவின் வாசனை வராதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x