

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக, ஓரினச் சேர்க்கையாளர் என சர்ச்சை எழுந்ததாக மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருபவர் சவுரப் கிர்பால். கடந்த அக்டோபர் 2017-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற கொலீஜியம் ஒருமனதாக சவுரப் கிர்பாலை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தது.
ஆனால் இவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற சர்ச்சை எழுந்தது. ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக இவர் பேசியதால் இந்த சர்ச்சை எழுந்தது. இதனால் அவரது நியமனம் நடைபெறவில்லை. எனினும் அதற்கான காரணம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதே காரணமாக தகவல் வெளியானது.
ஒரு நேர்காணல் ஒன்றில் கிர்பால் இதனை உறுதிப்படுத்தினார். இருபது வருடங்களாக எனது வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த ஓர் ஆணுடன் சேர்ந்து வாழ்வதாக கூறினார். நான் நீதிபதியாக நியமிக்கப்படாததற்கு பாலியல் தன்மையே காரணம் என்று நான் நம்புகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
நீதிபதியாக நியமனம் செய்ய உளவுத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. வெளிநாட்டைச் சேர்ந்த ஓர் ஆணுடன் அவர் சேர்ந்த வாழ்வதால் அவரை நியமிக்கவில்லை எனக் கூறி உளவுத்துறை கொடுத்த அறிக்கையால் அவரது நியமனத்திற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு இவரின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் கடந்த வருடம் இது தொடர்பாக அரசிடம் கொலிஜியம் கூடுதல் விளக்கம் கேட்டது.
இந்தநிலையில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பாலை நியமிக்கும் பரிந்துரைக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலீஜியம் நவம்பர் 11-ம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில் கிர்பாலை நியமிக்க பரிந்துரைத்தது.
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரைகளை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ஏ.எம். கான்வில்கர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் கொண்ட கொலிஜியம் பரிந்துரைத்தது. இதனை உச்ச நீதிமன்ற கொலிஜியமும் ஏற்றுக் கொண்டது.
இதன் மூலம் இந்தியாவின் முதல் ஓரினச்சேர்க்கை நீதிபதியாக கிர்பால் இருப்பார் என கூறப்படுகிறது