

கரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர, 20 மாதங்களுக்குப் பிறகு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேற்று முதல் இது அமலுக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம்இந்தியாவில் கரோனா வைரஸ்தொற்று பரவியது. இதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுலா விசா வழங்கல் நிறுத்தப்பட்டது. இதனிடையே இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் 2-வது அலை பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. தினசரி கரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.
இந்த சூழ்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பின்னர் படிப்படியாக பொதுமக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 110 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் கரோனா தொற்று பரவலும் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக தினசரி கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 15 ஆயிரத்துக்குள் உள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக சுற்றுலா தலங்களில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒப்பந்த விமானம் மூலம் இந்தியா வர மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. இப்போது, வர்த்தக விமானங்களில் வரும் 99 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதேநேரம், வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருக்க வேண்டும். அவர்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் 14 நாட்களுக்கு தங்கள் உடல்நிலையை கண்காணித்துக் கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தி உள்ளது. - பிடிஐ