

ஆளும் கட்சியின் மக்கள் நல திட்டங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு மாவட்ட ஆட்சியர், அரசியலில் குதிக்க தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இவர் ஆளும் கட்சியில் இணைய உள்ளார் என்றும், இவருக்கு எம்.எல்.சி. பதவி (சட்ட மேலவை) வழங்கப்பட உள்ளதென்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலத்தின், சித்திபேட்டை ஆட்சியராக இருந்தவர் வெங்கட்ராம ரெட்டி. ஐஏஎஸ் அதிகாரியான இவர்தனது ஆட்சியர் பதவியை திடீரென ராஜினாமா செய்து, இதற்கான கடிதத்தைமாநில தலைமைச் செயலாளர் சோமேஷ் குமாருக்கு அனுப்பி வைத்தார். இவரது ராஜினாமா நேற்று ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வெங்கட்ராம ரெட்டி, செய்தியாளர்களிடம் பேசிய தாவது: முதல்வர் கே. சந்திரசேகர ராவின் அரசு மக்களுக்காகவே பணியாற்றுகிறது. நாடு முழுவதும் தெலங்கானாவை உற்று நோக்கும் அளவுக்கு சந்திரசேகர ராவ் மக்கள் பணியாற்றி வருகிறார். நானும் இந்த வளர்ச்சிப் பணியில் முதல்வரோடு சேர்ந்து பயணிக்க வேண்டும் எனநினைத்தேன். வரப்போகும் 100 ஆண்டுகளுக்கு மக்கள். சந்திரசேகர ராவின்ஆட்சி குறித்து பேசிக்கொண்டி ருப்பார்கள்.
முதல்வரிடமிருந்து அழைப்பு வந்ததும் நான் டிஆர்எஸ் கட்சியில் இணைந்து மக்கள் பணி ஆற்றுவேன். அதுவரை அவரது அழைப்பிற்காக காத்திருப்பேன். இவ்வாறு வெங்கட்ராம ரெட்டி கூறினார்.
சமீபத்தில் சித்திபேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக திறப்பு விழாவுக்கு வந்திருந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் காலில் விழுந்து வணங்கினார் மாவட்ட ஆட்சியர் வெங்கட்ராம ரெட்டி. இதனால் இவர் தீவிர விமர்சனத்துக்கு ஆளானார். இந்த விமர்சனங்களை தற்போது இவர் உண்மை என நிரூபணம் செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விரைவில் நடைபெற உள்ள எம்.எல்.சி. தேர்தலில் வெங்கட்ராமரெட்டி ஆளும் கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட உள்ளார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.