Published : 15 Nov 2021 03:56 PM
Last Updated : 15 Nov 2021 03:56 PM

நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி அவசியம்; தேவைப்பட்டால் பூஸ்டர் எடுக்கலாம்: ஐஎம்ஏ பரிந்துரை

புதுடெல்லி

நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது அவசியம். அதில் தேவைப்படுவோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தலாம் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நீரிழிவு நாளையொட்டி, 10 நாட்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஐஎம்ஏ நடத்த உள்ளது. இந்தப் பிரச்சாரம் மூலம் 100 கோடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் இலக்கு வைத்துள்ளது. இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து இந்தப் பிரச்சாரத்தை நடத்துகிறது.

இது தொடர்பாக இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நீரிழிவு நோய் உள்ள லட்சக்கணக்கான மக்களுக்குத் தேவையான சிகிச்சை முறைகள் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் உடலில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க தொடர்ந்து ஆதரவும், சிகிச்சையும் அவசியம்.

இந்த ஒருவார காலத்துக்கு மாநில அளவிலான ஐஎம்ஏ மற்றும் உள்ளூர் கிளைகளில் நீரிழிவு நோய்க்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். உலக நீரிழிவு நாள் குறித்த சின்னம், அதைச் சுற்றி நீலநிற விளக்கு, பலூன்கள் தொங்கவிடப்படும்.

மக்கள் நீரிழிவு நோய் குறித்து அறிந்து கொள்வதற்காக ஒரு வாரம் முழுவதும் சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் நீரிழிவு நோய், சிகிச்சை முறைகள், பாதுகாப்பு முறைகள், சிக்கல்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்படும்.

நீரிழிவு நோயாளிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி எடுக்கலாம் என அறிவுறுத்தி வருகிறோம். எந்தத் தயக்கமும் தேவையில்லை. தேவைப்பட்டால் மருத்துவர்களின் முறையான ஆலோசனையின்படி, பூஸ்டர் டோஸ் கூட எடுத்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் 7.70 கோடி வயதுவந்தோர் நீரிழிவு நோயுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டில் 13.40 கோடியாக அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவருகிறது. ஐ.நா.வால் அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14-ம் தேதி நீரிழிவு நோய் நாள் என்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நகரங்களிலும் பெருநகரங்களிலும் வாழும் மக்கள்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இது குறிப்பாக மக்களின் வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம்தான் நீரிழிவு நோய் அதிகரிக்கக் காரணம். குறிப்பாக மன அழுத்தம், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஃபாஸ்ட் புட் போன்றவைதான் நீரிழிவு வருவதற்கான காரணங்களில் முக்கியமானவை.

இவை அனைத்தும் மனிதர்களின் பிஎம்ஐயை அதிகரிக்கச் செய்து இறுதியாக நீரிழிவில் கொண்டுசேர்க்கின்றன. இதில் ஆண்களைவிடப் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இரு தரப்பிலும் வயதானபின்புதான் இந்த நோயின் தீவிரம் குறைகிறது.

இந்தியாவில் இன்னும 57 சதவீதம் பேருக்கு நீரிழிவு குறித்த பரிசோதனையே நடத்தப்படவில்லை. அவர்களுக்கும் நடத்தப்படும்போது எண்ணிக்கை அளவு மேலும் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தாதபோதும், சரியான சிகிச்சை முறைகளை எடுக்காத நிலையில் தீவிரமான பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு முறையாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும், சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் உணவுகளைச் சாப்பிடுவது குறித்தும் ஐஎம்ஏ விழிப்புணர்வு அளிக்க இருக்கிறது. இதற்கு இந்திய உணவுப் பாதுகாப்புத் துறையுடன் இணைந்து ஈட் ரைட் கேம்பைன் என்ற திட்டத்தையும் செயல்படுத்துகிறது''.

இவ்வாறு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x