

முதலில் சிறை உணவை சாப்பிடுங்கள் என்று கூறி முன்னாள் மகாராஷ்டிரா அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு வீட்டு சாப்பாட்டிற்கு அனுமதி மறுத்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.
நவம்பர் 2ஆம் தேதி, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சரும், என்சிபி கட்சியின் மூத்த தலைவருமான அனில் தேஷ்முக் 12 மணிநேர விசாரணைக்குப்பின் அமலாக்கப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
அனில் தேஷ்முக் உடல்நிலையை கருத்தில் கொண்டு படுக்கை வசதி கோரிக்கை வைக்கப்பட்டபோது அவர் செய்த முறையீட்டை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இருப்பினும், வீட்டில் சமைத்த உணவை வழங்குவதற்கான அவரது கோரிக்கையை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது. ‘‘நீங்கள் முதலில் ஜெயில் சாப்பாடு சாப்பிடுங்கள். இல்லை என்றால் மற்ற கோரிக்கைகளையும பரிசீலிக்க வேண்டியிருக்கும்" என்று நீதிபதி கூறினார்.
தேஷ்முக்கிற்கு எதிராக மத்திய புலனாய்வுப் பிரிவு ஏப்ரல் மாதம் ஊழல் வழக்குப் பதிவு செய்ததை அடுத்து, அவர் மீது அமலாக்க இயக்குனரகம் விசாரணையைத் தொடங்கியது.
இதன்பிறகு, மும்பை முன்னாள் போலீஸ் பரம்பீர் சிங்கின் ரூ.100 கோடி லஞ்சப் புகாருக்குப் பிறகு பணமோசடி வழக்கு உருவாக்கப்பட்டது.
தேஷ்முக் தனது உள்துறை அமைச்சராக இருந்த பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ் மூலம் நகரின் பார்கள் மற்றும் உணவகங்களில் இருந்து ரூ.4.70 கோடி வசூலித்ததாகவும் சிபிஐ வாதிட்டது.
தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தேஷ்முக் மறுத்ததோடு, ''இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு கறைபடிந்த போலீஸ்காரர் (சச்சின் வாஸ்) என்பவர் உள்நோக்கத்துடன் கூறப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது'' என்று வாதிட்டார்.
தேஷ்முக் இந்த ஆண்டு தொடக்கத்தில், தேடப்பட்டுவரும் பரம்பீர் சிங்கின் லஞ்சப் புகார்கள் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.