காற்று மாசைக் குறைக்க 6 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்?- கேஜ்ரிவாலுக்கு கவுதம் கம்பீர் கேள்வி

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் | கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் | கோப்புப்படம்
Updated on
2 min read

கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி கட்சியும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலும் காற்று மாசைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்தனர்? உச்ச நீதிமன்றம் தலையிட்டதால்தான் நடவடிக்கை எடுப்பார்களா? என பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற நிலையிலிருந்து ஆபத்தான நிலைக்குச் சென்றுவிட்டது. இதையடுத்து, காற்று மாசு குறித்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றத்திடம், காற்று மாசைக் குறைக்க லாக்டவுன் கொண்டுவருவதற்குத் தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், காற்று மாசைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தச் சூழலில் காற்று மாசைக் குறைக்க நடவடிக்கை எடுக்காத ஆம் ஆத்மி அரசையும், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலையும் பாஜக எம்.பி. கவுதம் கம்பீர் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''உச்ச நீதிமன்றத் தலையீட்டுக்குப் பின்புதான் டெல்லி அரசுக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வருகிறது. ஆண்டு முழுவதும் எங்கு சென்றிருந்தார்கள். டெல்லியின் காற்று மாசைச் சமாளிக்கவும், வேளாண் கழிவுகளை எரிப்பதை முடிவுக்குக் கொண்டுவரவும் தீர்வு இருக்கிறது என்று டெல்லி அரசு கூறியது. அந்தத் தீர்வு என்ன?

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கேஜ்ரிவால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. எந்த நகருக்கும் பொதுப் போக்குவரத்து முதுகெலும்பு போன்றது. அதை மேம்படுத்த கேஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் எவ்வாறு மக்கள் தங்கள் வாகனத்திலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாறுவார்கள். மக்களுக்கு எவ்வளவு சிரமம் இருக்கிறது என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளாக டெல்லியில் காற்று மாசைக் குறைக்க கேஜ்ரிவால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. லாக்டவுன்தான் காற்று மாசைக் குறைக்கத் தீர்வு என்றால், அதை ஏன் முன்கூட்டியே செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்புதான் செய்ய வேண்டுமா?

டெல்லியில் காற்று மாசைக் குறைக்க எந்தவிதமான பணியும் செய்யவில்லை. உச்ச நீதிமன்றம் தலையிட்டதால்தான் செய்வேன் என்றால், ஓராண்டுக்கு முன்பே இதை ஏன் செய்யவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக காற்று மாசைக் குறைக்க டெல்லி அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. பொதுப் போக்குவரத்தை முன்னேற்ற நடவடிக்கை என்ன?

காற்று மாசைக் குறைக்க குழந்தைகள் போக்குவரத்து சிக்னல் அருகே நின்று பதாகைகளை ஏந்தி, பிரச்சாரம் செய்ய வைத்ததைத் தவிர வேறு என்ன செய்தது ஆம் ஆத்மி அரசு. இந்தக் குழந்தைகளின் கரங்களில் பதாகைகளை வழங்கியதற்கு பதிலாக லேப்டாப் வழங்கியிருந்தால், ஆன்லைன் வகுப்பு படித்திருக்கும்.

வீட்டில் இருக்க வேண்டிய குழந்தைகளை 8 மணி நேரம் சாலையில் நிற்க வைத்தது டெல்லி அரசு. டெல்லி அரசு பொதுப் போக்குவரத்திலோ உள்கட்டமைப்பிலோ முதலீடு செய்யவில்லை. யமுனையைச் சுத்தப்படுத்தக் கூட முடியவில்லை. உங்களை டெல்லியின் மகன் என்று அழைப்பது எளிது. ஆனால், டெல்லியின் மகனாக மாறுவது மிகவும் கடினம்''.

இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in