

உ.பி.யின் மதுராவில் கட்டுப்பாடுகள் மிக்க புனித இடங்களை இரவில் படம்பிடித்து யூடியூப்பில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் இந்துக்களின் புனிதத் தலமான பிருந்தாவனம் திகழ்கிறது. இவ்விடத்தின் மிக முக்கியமான இடமாக நிதிவன் ராஜ் உள்ளது. இதன் அர்த்தம் துளசிவனம் என்பதாகும். இங்குதான் கிருஷ்ணர், ராதா மற்றும் கோபியர்கள் ஆகியோருடன் விளையாடி மகிழ்ந்ததாக நம்பிக்கை உள்ளது. புராணங்களிலும் இதற்கான குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.
அதுமட்டுமின்றி நிதிவன் ராஜ் பகுதியில் கிருஷ்ணர் , கோபியர்கள் கூடி விளையாடிய ராசலீலா ஒவ்வொரு இரவிலும் நடைபெறுவதாக கருதப்படுகிறது. இதனால் இப்பகுதிக்கு பொதுமக்கள் மட்டுமின்றி யாருக்கும் அனுமதியில்லை.
பிருந்தாவனத்தில் கட்டுப்பாடுகள் மிக்க நிதிவன் ராஜ் பகுதிக்கு இரவு நேரத்தில் எந்தவித அனுமதியும் பெறாமல் ஒருவர் நுழைந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் தெரியாமல் துளசி வனத்திற்குள் நுழைந்து அதனை படம்பிடித்து யூடியூப்பில் வெளியிட்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மதுரா நகரின் காவல்துறை கண்காணிப்பாளர் மார்தண்ட் பிரகாஷ் சிங் கூறியதாவது:
இந்துக்களின் புனித இடமாகக் கருதப்படும் பிருந்தாவனத்தின் கட்டுப்பாடுகள் மிக்க நிதிவன் ராஜ் பகுதியில் கடந்த வாரம், கவுரவ் சர்மா என்பவர் நுழைந்து வீடியோ படம் எடுத்துள்ளார்.
நவம்பர் 9 அன்று இந்த வீடியோவை தனது கவுரவ்சோன் என்ற யூடியூப் சேனலில் அவர் வெளியிட்டுள்ளார். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து அதை படம்பிடித்ததற்காக யூடியூப் சேனல் நிர்வாகியான கவுரவ் சர்மா டெல்லியில் உள்ள அவரது இல்லத்திலேயே போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, சர்மா தனது உறவினர் பிரசாந்த் மற்றும் நண்பர்கள் மோஹித் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் நவம்பர் 6 ஆம் தேதி இரவு வீடியோவை படம்பிடித்ததாக ஒப்புக்கொண்டார்
கவுரவ் சர்மா தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ படப்பிடிப்பில் உதவி அவரது கூட்டாளிகளைப் பிடிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. புனித இடத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நடத்தியதற்கு மடாதிபதிகள், அர்ச்சகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பின்னர் அந்த வீடியோவை தனது யூடியூப் தளத்திலிருந்து சர்மா நீக்கியுள்ளார்.
நிதிவன் ராஜின் அர்ச்சகர் ரோஹித் கோஷ்வாமியின் புகாரின் பேரில், சர்மா மீது பிருந்தாவன் காவல் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 295 ஏ மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 66 இன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மதுரா காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.