டெல்லியை உலுக்கும் காற்று மாசு; அவசர கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியை உலுக்கும் காற்று மாசு; அவசர கூட்டத்தை கூட்ட மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

டெல்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளை உலுக்கி வரும் காற்று மாசை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை, இதற்கான கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்பைக் காட்டிலும் டெல்லியில் காற்று மாசின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பனிக்காலங்களில் காற்றில் மாசுத் துகள்கள் தங்கிவிடுவதால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதன் மூலம் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. ஏற்கெனவே வேளாண் அறுவைடைக்கு பிறகு விவசாயிகள் கழிவுகளை எரித்து வரும் நிலையில் தீபாவளி பட்டாசு காரணமாக காற்று மாற்று மேலும் அதிகரித்தது.

இதனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
காற்று மாசை குறைக்க தண்ணீரை தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டெல்லியை உலுக்கி வரும் காற்று மாசு குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது காற்று மாசை கட்டுப்படுத்த ஒரு சில நாட்களுக்கு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக டெல்லி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லி சுற்றுப்பகுதியில் 10 சதவீத அளவில் காற்று மாசு ஏற்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:

அத்தியாவசியமற்ற போக்குவரத்து, கட்டுமான பணிகள், போக்குவரத்து நெரிசல், பயிர்க்கழிவுகள் எரித்தல் போன்றவையே காற்று மாசிற்கு முக்கிய காரணமாகும்.

காற்று மாசை கட்டுப்படுத்த கட்டுமானத்தை நிறுத்துதல், அத்தியாவசியமற்ற போக்குவரத்தை நிறுத்துதல், வீட்டிலிருந்து பணிகளை மேற்கொள்ளுதல் போன்றவைகள் தொடர்பாக அவசரமாக முடிவெடுக்க வேண்டும்.

இதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டம். நாளை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். அக்கூட்டத்தில் பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியாணா மாநிலங்களின் தலைமை செயலர்களும் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in