

தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் கர்னல் விப்லவ் திரிபாதி (41) மணிப்பூர் மக்களுக்காக வாழ்ந்தவர் என்று உள்ளூர் மக்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
மணிப்பூரின் குகா பகுதி அசாம் ரைபிள்ஸ் படையின் கமாண்டராக பணியாற்றிய அவர், மனைவி அனுஜா (36), மகன் அபிர் (5) ஆகியோருடன் நேற்று முன்தினம் தேஹங் பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் பாதுகாப்புக்காக அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் முன்னும் பின்னும் வாகனத்தில் சென்றனர்.
அப்போது மக்கள் விடுதலை ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் கண்ணிவெடி தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கர்னல் விப்லவ் அவரது மனைவி, மகன் மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஒடிசாவை பூர்வீகமாகக் கொண்ட விப்வ் குடும்பத்தினர், சத்தீஸ்கரின் ராய்கர் நகரில் குடியேறினர். விப்லவின் தாத்தா கிஷோரி மோகன் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். அவரது தந்தை சுபாஷ் திரிபாதி (76) மூத்த செய்தியாளர். தாயார் ஆஷா சமூக சேவையாற்றி வருகிறார்.
அதீத தேசப்பற்று காரணமாக விப்லவும் அவரது தம்பி அனய் திரிபாதியும் ராணுவத்தில் அதிகாரியாக இணைந்தனர். உத்தராகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய ராணுவ அகாடமி, தமிழகத்தின் வெலிங்டனில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்ற விப்லவ், அசாம் ரைபிள்ஸ் படையின் கர்னலாக மணிப்பூரில் பணியாற்றி வந்தார்.நாட்டுக்கு சேவையாற்றிய அவர் மணிப்பூர் மக்களின் முன்னேற்றத்துக்காக பெரிதும் பாடுபட்டார்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, “கர்னல் விப்லவ் பழகுவதற்கு இனியவர். மணிப்பூர் மக்களுக்காக அவர் வாழ்ந்தார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை நிறைவேற்ற உறுதுணையாக இருந்தார். மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்தார். அவரதுமறைவு மிகுந்த வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தனர்.
மணிப்பூரைச் சேர்ந்த பல்வேறுபழங்குடி அமைப்புகள் கர்னல் விப்லவ் உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விப்லவ் மீது தாக்குதல் நடத்திய மக்கள் விடுதலை ராணுவம் என்ற தீவிரவாத அமைப்பு சீனாவின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. சீனாவின் நட்பு நாடான மியான்மர் மற்றும் மணிப்பூர் வனப்பகுதிகளில் மறைந்து வாழும் இந்த அமைப்பின் தீவிரவாதிகள், தனி நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வடகிழக்கில் அமைதியை சீர்குலைத்து வரும் இந்த தீவிரவாத அமைப்பை வேரறுக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.
- பிடிஐ