Published : 15 Nov 2021 07:11 AM
Last Updated : 15 Nov 2021 07:11 AM

29-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு; பாலாற்றில் அணை கட்ட தமிழகம் அனுமதி தர வேண்டும்: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தல்

திருப்பதியில் 29-வது தென் மண்டல முதல்வர்கள் மாநாடு மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் பங்கேற்றனர். படம்: பிடிஐ

திருப்பதி

பாலாற்றில் அணை கட்ட தமிழகஅரசு ஒப்புதல் வழங்க வேண்டும்என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி உள்ளார்.

திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 29-வதுதென் மண்டல முதல்வர்கள்மாநாடு மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா தலைமையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் பொன்முடி, தலைமைச் செயலாளர் இறையன்பு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலங்கானா தலைமைச் செயலாளர் சோமேஷ் குமார், உள்துறை அமைச்சர் முகமது அலி, கேரள தலைமைச் செயலாளர் விஷ்வாஸ் மெஹ்தாமற்றும் அமைச்சர் சந்திரசேகரன்,தெலங்கானா மற்றும் புதுச்சேரிஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்,அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் தேவேந்திர குமார் ஜோஷி, லட்சத்தீவின் அட்மினிஸ்டேடர் பிரபுல் படேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் ஆந்திர முதல்வர்ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானின் உருவச் சிலையை அன்பளிப்பாக வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

மாநிலப் பிரிவினை ஏற்பட்டு 7 ஆண்டுகள் ஆனாலும், இன்றுவரை பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப் படாமலேயே உள்ளன. இதனால் ஆந்திரவுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரு தனி கமிட்டி அமைக்க வேண்டியது அவசியம்.

மாநில பிரிவினையின்போது ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை.

மாநிலப் பிரிவினையால் ஆந்திரா பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி விட்டது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னைக்கு கடந்த 1976, 77, 83 ஒப்பந்தத்தின்படி, 5 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் விநியோகம், அதற்குண்டான வசதிகளை செய்து கொடுத்தது போன்றவற்றிற்காக கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் ஆந்திராவுக்கு ரூ.338.48 கோடி பாக்கி வைத்துள்ளது.

பாலாற்றில் அணை கட்டும் திட்டத்தை தமிழகம் தடுக்கிறது. இத்திட்டம் மூலம் குப்பம் தொகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்கும். இத்திட்டம் மூலம் வெறும் 0.6 டிஎம்சி நீர் மட்டுமே தேக்கப் படும்.

கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்ததை மீறி, மனிதாபிமான அடிப்படையில் 10 டிஎம்சி நீர் சென்னைக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பாலாறு விஷயத்தில் தமிழகம் கறாராக உள்ளது. இதுகுறித்தும் நடவடிக்கை எடுத்தல் அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x