

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நேற்று இந்திய கால்நடை மருத்துவ சங்கம் ஏற்பாடு செய்திருந்த பெண் கால் நடை மருத்துவர்கள் மாநாட்டில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:
பசுக்கள், மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடப்பதில்லை. எனவே, அவை மிகவும் முக்கிய மானவை. முறையான அமைப்பை ஏற்படுத்தினால், பசுக்கள் மற்றும் அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை, மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உதவும். இந்த துறையில் பெண்களின் பங்களிப் புடன் நாம் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரில் இருந்து, பூச்சிக்கொல்லிகள் முதல் மருந் துகள் வரை பல முக்கிய பொருட் களை தயாரிக்கலாம்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பெருமளவில் உரம் தயாரிப்பதற்கு பசுவின் சாணம் தேவைப்படுகிறது. எனவே அந்த பசுவின் சாணத்தை விலை கொடுத்து வாங்க அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான பூர்வாங்க வேலைகளில் அரசு ஈடுபட்டுள் ளது. விரைவில் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிடுவோம்.
பொதுமக்களின் அவசர மருத்துவ உதவிக்காக 108 என்ற ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. அதைப் போலவே, கால்நடைகளைப் பாதுகாக்கவும், அவற்றுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் 109 என்ற ஹெல்ப்லைன் சேவையை தொடங்க அரசு பரிசீலித்து வருகிறது. அவசர சிகிச்சை தேவைப்படும் கால்நடைகள் தொடர்பாக 109 என்ற தொலை பேசி எண்ணுக்கு போன் செய் தால் கால்நடைகள் இருக்கும் இடத்துக்கே மருத்துவர்கள் வந்து சிகிச்சை வழங்குவர்.
இவ்வாறு அவர் பேசினார்.
பாஜக ஆளும் ம.பி.யில், பசுக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பசுக்களைப் பாதுகாப்பதற்கும், பசுஉற்பத்தியை மேம்படுத்துவதற்கும் 6 துறைகளின் அமைச்சர்களைக் கொண்ட பசு அமைச்சரவை உருவாக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
- பிடிஐ