

உத்தரப்பிரதேசத்தில் 16 வயது சிறுமி கழுத்தில் நகைகளுடன் சாலையில் நடந்து செல்ல முடியும் என அமி்த் ஷா தெரிவித்துள்ளார். ஆனால், உண்மையான நிலை அங்குள்ளவர்களுக்குத்தான் தெரியும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அதநேரம் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உ.பியில் முகாமிட்டு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே மயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க போராடி வருகின்றன.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து வெகுவாகப் பாராட்டினார். பண்டிகை காலத்தில் 16 வயது சிறுமி கழுத்து நிறைய நகைகளுடன் நள்ளிரவில் இரு சக்கரத்தில் தனியாகச் செல்லும் அளவுக்குஉத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு முன்னேறிவிட்டது என்று பாராட்டியிருந்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ட்விட்டரில் கடுமையாகச் சாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் பாஜக ஆளும் உ.பியில் கான்பூர் நகரில் 3 பெண்களிடம் நகைபறிப்பு நடந்துள்ளது. அந்த செய்தியையும்தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இணைத்துள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பியில் சட்டம் ஒழுங்கை பாராட்டுகிறார். கழுத்துநிறைய நகைகளை அணிந்து பெண்கள் தனியாக நள்ளிரவில் செல்லலாம் எனத் தெரிவித்தார். ஆனால், உ.பியில் வாழும் மக்களுக்கு மட்டும்தான் நாள்தோறும் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியும்.
அதற்காகத்தான் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவது அவசியம் என்கிறோம். அரசியலில் பெண்கள் பங்கேற்பும் அவர்களுக்கு அரசியல்ரீதியான பாதுகாப்பும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்