

உத்தரப்பிரதேசத்தில் 2022ம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் கேள்விக்கு பாஜக பதில் அளிக்கட்டும். அதற்குள் 2024ம் ஆண்டு பொதுத் தேர்தலைப் பற்றி பாஜக கவலைப்படத் தேவையில்லை என்று சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேசத்தில் 2022ம் ஆண்டு சட்டப்ேபரவைத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்கும் முயற்சியில் ஆளும் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. அதநேரம் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உ.பியில் முகாமிட்டு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே மயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆகிய கட்சிகளும் ஆட்சிையப் பிடிக்க போராடி வருகின்றன.
சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஏற்கெனவே இரு ரத யாத்திரைகளை நடத்தி பரிச்சாரத்தை முடுக்கிவிட்ட நிலையில் 3-வது விஜய ரத யாத்திரையை கோரக்பூரில் நேற்று தொடங்கினார்.
பாஜகவின், முதல்வர் ஆதித்யநாத்தின் கோட்டையாகக் கருதப்படும் கோரக்பூரில் ரத யாத்திரையைத் தொடங்கி சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:
கடந்த 2017ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மட்டுமல்லாமல் அனைத்து வகை நிர்வாகத்திலும் பாஜக தோல்வி அடைந்துவிட்டது. இந்த மாநிலத்தின் மக்களை பாஜக ஏமாற்றிவிட்டது, அதற்கு பாஜக பொறுப்பேற்க வேண்டும்.
ஆளும் பாஜகவின் 2024ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தல் குறித்து கவலைப்படக்கூடாது, 2022ம் ஆண்டு உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் முதலில் மக்களுக்கு பதில் அளிக்க வேண்டும்.
முன்பு, பாஜக அரசு பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் அரசாக இருந்தது, ஆனால், தற்போது, அரசின் சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாக மாறிவிட்டது. பாஜகவின் வேகத்தை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து மத்திய அரசு நோகடிக்கிறது. பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது, பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கிறது. சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதி்ப்பு மோசமாகச் சரிந்துவிட்டது.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏழைகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மத்திய அரசு என்ன உதவி செய்தது. வேளாண் சட்டங்களை எதிர்த்து பல மாதங்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கையை செவிமெடுத்துக் கேட்காமல் போராட்டத்தை அடக்குவதிலேயே குறியாக இருக்கிறது.
ஜனநாயகத்தில் அரசு கோரிக்கையை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதுதான் போராட்டம். ஆனால் இந்த அரசு போராடுபவர்கள் குரல்களை ஒடுக்குகிறது. விவசாயிகளை அவமதித்து அவர்களை நிலங்களை பிடுங்குகிறது.
லேப்டாப்பை எவ்வாறு இயக்குவதென்றே தெரியாத முதல்வ ஆதித்யநாத் மாணவர்களுக்கு லேப்டாப்பை வழங்குகிறார். கோரக்பூர் மக்கள் வளர்ச்சிக்காக காத்திருக்கிறார்கள், அகங்காரம் பிடித்த பாஜகவை மக்கள் கீழே இறக்குவார்கள்.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.