

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலை யில், ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் நிறுவனம் சார்பில் பிரம் மாண்டமான தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அனைத்து தொகுதிகளையும் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகளை ஏபிபி நியூஸ் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உத்தரபிரதேசத்தில் கடந்த முறை பாஜக 312 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், இம்முறை 213 முதல் 221 தொகுதி களை மட்டுமே பாஜகவால் கைப்பற்ற முடியும். கடந்த தேர்தலில் 41.4 சதவீதமாக இருந்த அக்கட்சியின் வாக்கு சதவீதம், இந்த தேர்தலில் 40.7 சதவீதமாக சரியக் கூடும்.
அடுத்தப்படியாக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 152 முதல் 160 தொகுதிகளில் வெற்றி பெறும். கடந்த முறை, 47 தொகுதிகளில் மட்டுமே சமாஜ்வாதி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இத்தேர்தலில் 16 முதல் 20 தொகுதிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை, 19 தொகுதிகளில் பகுஜன் வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் ஆதரவு சற்று அதிகரித்துள்ளது. அக்கட்சியின் வாக்கு கடந்த முறையை விட 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது. இவ்வாறு கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.