Published : 14 Nov 2021 03:06 AM
Last Updated : 14 Nov 2021 03:06 AM

பிரதமர் மோடியின் கனவு திட்டம் காசி விஸ்வநாதர் கோயில் காரிடார்: டிசம்பர் 13-ம் தேதி திறப்பு விழாவுக்காக இறுதிக் கட்டப் பணிகளில் தொழிலாளர்கள் மும்முரம்

கங்கை நதியின் லலிதா படித் துறை. இங்கிருந்துதான் காசி விஸ்வநாதர் கோயில் காரிடார் சாலை தொடங்குகிறது.

வாரணாசி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2018-ம் ஆண்டுமார்ச்சில் காசி விஸ்வநாதர் கோயில் (காரிடார்) வளாக திட்டம் ரூ.600 கோடி செலவில் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் கனவு திட்ட மாகக் கருதப்படும் இத்திட்டம், அவரது சொந்தத் தொகுதியான வாரணாசியில் தொடங்கப்பட்டது.

காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் லலிதா படித் துறையில் இருந்து 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட நடைபாதை, மிகப் பெரிய அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்கும் மையம் உள்ளிட்ட அடிப்படைக் கட்ட மைப்புகள் மேம் படுத்தப்படுகின்றன.

இவற்றின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் விஸ்வ நாதர் கோயில் வளாகத்தை பிரதமர் மோடி டிசம்பர் 13-ம் தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பணிகள் டிசம்பர் 10-ம் தேதி நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஏற்கெனவே பணியாற்றி வரும் தொழிலாளர்களுடன் கூடுதலாக 400தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட் டுள்ளனர். இதனால் அங்கு இரவு பகலாக வேலைகள் நடைபெறுகின்றன.

காசி விஸ்வநாதர் கோயிலை கங்கை கரைகளுடன் இணைக்கும் வகையில் அமைக்கப்படும் 320 மீட்டர் நீளமும் 20 மீட்டர் அகலமும் கொண்ட மிக நீண்ட நடைபாதை மூலம் பக்தர்கள் எளிதாக கோயிலை அடைய முடியும்.

மிக நீளமான இந்த நடைபாதை பாலத்தின் மூலம் ஒரே நேரத்தில் 2 லட்சம் பக்தர்கள் சென்று வர முடியும். மேலும் கங்கைக் கரை அழகை ரசித்தபடி சிற்றுண்டி மையம் இங்கு மிக பிரம்மாண்டமாக அமைக்கப்படவுள்ளது.

கோயிலில் காசி விஸ்வநாதரை தரிசிக்க பக்தர்கள் காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்த வகையில் பாலத்தில் நடந்து சென்று எளிதாக தரிசித்துவிட்டு மீண்டும் பாலத்தின் வழியே கங்கை கரையை எளிதாக அடைய முடியும்.

இதுகுறித்து பாஜகவின் சமூக ஊடகங்கள் ஒருங்கிணைப்பாளர் (உ.பி மாநிலம்) சசி குமார் கூறும்போது, “டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் நாட்டின் அனைத்து புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெறும். ஜோதிர்லிங்க தலங்களில் இருந்து குருக்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள்.

மேலும் அன்றைய தினம் கங்கை நதி படித்துறைகள் அனைத்தும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படும். கங்கை நதியின் புனிதத்தன்மை கெடாமலும், பழமை மாறாமலும் இந்தப் பணிகள் இங்கு நடைபெற்று வரு கின்றன. மேலும் பக்தர்கள் வந்து தங்கி செல்ல வசதியாக விடுதிகள் கட்டப்படுகின்றன. போதுமான அளவு கழிப்பறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மேலும் உடல் நலக்குறைவால் பக்தர்கள் பாதிப்புக்கு உள்ளானால் அவர்களை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வசதியும், மருத்துவ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

படித் துறைக்கு அருகே மிகப்பெரிய அளவில் ஓட்டல்கள், சிற்றுண்டி விடுதிகள், கடைகள், பக்தி புத்தகங்கள் விற்பனை மையம், விஐபி விருந்தினர் இல்லம், வேத மந்திரம் ஓதும் மையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் மையம், யாத்ரீகர் தங்கும் விடுதி, கழிப்பறைகள், 2 அருங்காட்சியகங்கள் அடங்கிய 3 அடுக்கு பிரமாண்ட கட்டிடம் இங்கு அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x