

பஞ்ச பூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா இன்று பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
பஞ்ச பூத தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு விழா இன்று பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
ராகு-கேது பரிகார தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் பிரம்மோற்சவ விழாவில், முதலில் பக்தனுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் முதலில் கோயில் அருகே உள்ள பக்த கண்ணப்பர் கோயிலில் கொடியேற்றுவது ஐதீகம். பின்னர் மறுநாள், சிவன் கோயில் முன் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். இதனை தொடர்ந்து தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் பல்வேறு வாகனங்களின் வீதிவுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதில் முக்கிய நாட்களாக வரும் 7-ம் தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு காலை நந்தி வாகன சேவையும், இரவு சிம்ம வாகன சேவையும் நடைபெறும். இதனை தொடர்ந்து நள்ளிரவு லிங்கோத்பவ தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மறுநாள் 8-ம் தேதி காலை தேர்த்திருவிழாவும், 9-ம் தேதி இரவு சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.