

நாடு முழுவதும் தகுதியுள்ளவர்களில் 50 சதவீதத்துக்குக் குறைவாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் வீட்டுக்கே சென்று, சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி காணொலி மூலம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:
''மக்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ளவர்கள் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தலாம்.
முதல் டோஸ் செலுத்தியவர்களை, 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தக் கோரி ஊக்கப்படுத்தலாம். இந்தியாவில் தடுப்பூசி செலுத்தத் தகுதியுள்ளவர்களில் 79 சதவீதம் பேர் முதல் டோஸ் செலுத்திவிட்டனர். 38 சதவீதம் பேர் முழுமையாக இரு டோஸ் செலுத்தியுள்ளனர். பல மாநிலங்களில் 100 சதவீத இளைஞர்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் ஆர்வமும், விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. சிலர் பல காரணங்களால் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்குகிறார்கள். அதாவது அவர்கள் வாழுமிடங்களில் தடுப்பூசி கிடைக்காமல் இருக்கலாம். பக்கவிளைவுகள் குறித்த பயம், தடுப்பூசி குறித்த தவறான புரிதல் போன்றவை இருக்கும். அதைக் களைய வேண்டும்.
சுகாதாரப் பணியாளர்கள் வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள், மக்களின் தயக்கத்தைப் போக்கி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவார்கள். இந்தப் பிரச்சாரத்தைச் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளூர் மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், என்எஸ்எஸ் அமைப்பினர் ஆகியோரின் உதவியுடன் இந்தப் பிரச்சாரம் நடக்கும்''.
இவ்வாறு அக்னானி தெரிவித்தார்.