

குருகிராமின் பொது இடங்களில் முஸ்லிம்களின் வழக்கமான வெள்ளிக்கிழமை தொழுகைக்கு நேற்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொழுகைக்கு இந்து அமைப்புகளும் குடியிருப்போர் சங்கங்களும் இணைந்து தடை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியை ஒட்டியுள்ள குருகிராம் பெரு நிறுவனங்களின் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம். ஹரியாணா மாநிலத்தில் அமைந்துள்ள அந்நகர், ஒரு துணை நகரமாகவும் வளர்ந்துள்ளது. சுமார் 25 வருடங்களாக இங்கு உ.பி., பிஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் முஸ்லிம் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பணியாற்றி வருகின்றனர். இங்கு மூன்று மசூதிகள் மட்டுமே அமைந்துள்ளன.
இது போதாததால் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் 106 இடங்களில் திரளாகக் கூடி தொழுகை நடத்தப்படுகிறது. இவற்றில் ஒரு சில இடங்கள், அம்மாநில வக்ஃபு வாரியம் மற்றும் தனியாருக்குச் சொந்தமானவை.
இச்சூழலில், கடந்த 2018இல் முஸ்லிம்களின் பொது இடங்களின் தொழுகைக்கு இந்துத்துவா அமைப்பினர் மூலம் எதிர்ப்பு கிளம்பியது. இப்பிரச்சினையில் தலையிட்ட குருகிராம் மாநகராட்சி ஆணையம், அவர்களுக்கு அரசு ஒதுக்கிய 106 இடங்களை 37 எனக் குறைத்து ஆணை வெளியிட்டது. இந்த 37 இடங்களில் தொழுகை தொடர வெள்ளிக்கிழமைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17 (வெள்ளிக்கிழமை) அன்று மீண்டும் இந்துத்துவாவினர் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். பாரத் மாதா வாஹினி எனும் அமைப்பை நடத்தும் தினேஷ் பாரதி தலைமையில் எதிர்ப்புகள் வலுத்தன. இதனால், தினேஷ் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதையடுத்து தொழுகையை எதிர்ப்போர் பட்டியலில் விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட முக்கிய இந்து அமைப்புகளுடன், குடியிருப்போர் நலச்சங்கங்களும் இணைந்தன.
செக்டர் 12 உள்ளிட்ட மூன்று இடங்களில் தொழுகை நடத்த முடியாதபடி, தீபாவளிக்கு மறுநாள் வந்த வெள்ளிக்கிழமையில் கோவர்தன் பூஜை நடத்தப்பட்டது. இதில், பசு மாடுகளுடன் டெல்லி பாஜகவின் முக்கியத் தலைவரான கபில் மிஸ்ராவும் கலந்து கொண்டார்.
நேற்றைய (வெள்ளிக்கிழமை) தொழுகையிலும் செக்டர் 12 மைதானத்தில் இந்து தரப்பினர் ஆக்கிரமித்தபடி அமர்ந்து வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இதனால், முஸ்லிம்கள் வழக்கம்போல் தங்கள் வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்த முடியாமல் திரும்பினர்.
இந்த விவகாரத்தில் இரண்டாகிவிட்ட முஸ்லிம்களில் ஒரு பிரிவினர், எதிர்ப்பை ஏற்றுத் தொழுகையைக் கைவிடத் தயாராகி விட்டனர். இதற்கு அவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது காரணம். எனினும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் உள்ளிட்ட சில முஸ்லிம் அமைப்பினர் பொது இடங்களில் தொழுகை நடத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர். இவர்களில் ராஷ்டிரிய முஸ்லிம் மன்ச் என்பது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் சிறுபான்மைப் பிரிவு ஆகும்.
இதனிடையே, இந்து, முஸ்லிம்களுடன் குருகிராம் மாநகராட்சியின் துணை ஆணையரான யஷ் கர்க், இரு வாரங்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எந்த முடிவும் ஏற்படவில்லை.
பிறகு மாநகராட்சி ஒதுக்கிய 37 இடங்கள் 29 இடங்களாகக் குறைக்கப்பட்டன. இதன் பிறகும் பல இடங்களில் தொழுகை நேரத்தில் ஒலிபெருக்கிகளில் இந்து பக்திப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு, தடை ஏற்படுத்தப்பட்டன.
குருகிராமில் ஹரியாணா மாநில மத்திய முஸ்லிம் வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான 19 இடங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவற்றைக் காலி செய்து அங்கு தொழுகை நடத்திக்கொள்ளும்படியும் அரசு நிர்வாகம் தரப்பில் முஸ்லிம்களிடம் நட்புரீதியாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரம் உத்தராகண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். கடந்த ஆட்சியில் நெடுஞ்சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி அளித்தது தவறு என காங்கிரஸ் மீது புகார் கூறியிருந்தார். இச்சூழலில் குருகிராமின் தொழுகைப் பிரச்சினை முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.