

முற்போக்குச் சிந்தனை கொண்ட கேரளாவில் ஆசிரியைகள் சேலை அணிந்து செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆடை உரிமை முழுவதும் பெண்களுக்கு இருக்கிறது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தெரிவித்தார்.
கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் சேலை அணிந்து வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். ஆடை அணியும் உரிமை பெண்களுக்கு உண்டு, அதை உறுதி செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து நேற்று ஓர் உத்தரவு பிறப்பித்து, பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று தெரிவித்தார். அமைச்சர் ஆர்.பிந்துவும் ஒரு கல்லூரிப் பேராசிரியராகத்தான் இருந்தார். அவர் பணிக்குச் செல்லும்போது சேலைக்குப் பதிலாக சுடிதார் அணிந்துதான் சென்றார்.
அமைச்சர் ஆர்.பிந்து வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
“பல்வேறு முறை கேரள அரசு பலமுறை தனது நிலைப்பாட்டைப் பெண்களின் ஆடை விஷயத்தில் தெளிவுபடுத்திவிட்டது. ஆசிரியைகள் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் உடல் வசதிக்கு ஏற்பவும், கல்வி நிறுவனத்துக்கு ஏற்பவும் அணிய உரிமை உண்டு. ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்பது கேரளாவில் கட்டாயமில்லை.
ஒரு ஆசிரியருக்கு ஏராளமான பொறுப்புகள் உண்டு. இதுபோன்ற காலத்துக்கு உதவாத, மாற்றத்தை ஏற்காத சிந்தனைகளை ஏற்க வேண்டிய அவசியமில்லை. ஒருவர் ஆடை அணிவது அவரின் தனிப்பட்ட முடிவு. இதில் அவரின் ஆடை விஷயத்தை விமர்சிக்கவோ, தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை.
2014-ம் ஆண்டு மே 9-ம் தேதி இது தொடர்பாக கேரள அரசு விரிவான அரசாணையும் பிறப்பித்துள்ளது. மேலும், கூடுலாத இந்த அரசாணையையும் பிறப்பிக்கிறோம். கேரளா போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற கட்டாயப்படுத்தக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.