

மைசூருவில் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு அங்கிருந்த வர்கள் உடனடியாக உதவாமல் வேடிக்கைப் பார்த்ததால், 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் ஜோகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் (39), மகேஷ் (34), மஞ்சுநாத் (29) ஆகியோர் விவசாய கூலித் தொழிலாளிகளாக உள்ளனர். இந்த 3 பேரும் கடந்த 24-ம் தேதி மாலை மைசூருவில் நடைபெற்ற தேர் திருவிழாவுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். ஹெச்.டி.கோட்டை அருகே சென்ற இவர்களது இரு சக்கர வாகனத்தின் மீது கர்நாடக அரசு பேருந்து மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.
அங்கிருந்த சிலர் இவர்களை தூக்கி அமர வைத்து குடிநீர் கொடுத்தனர். 3 பேரும் தங்களின் உயிரை காப்பாற்றுமாறு கெஞ்சி னர். கை, கால் முறிந்து வலியால் அலறி துடித்தனர். தயவுசெய்து யாரேனும் காப்பாற்ற முன் வாருங்கள் என கதறினர். ஆனால் அங்கிருந்த பொதுமக்களில் சிலர்,
‘நீங்கள் யார்? உங்களுடைய பெயர் என்ன? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்?’ என கேள்வி மேல் கேள்வி கேட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சிக்கிய ரமேஷ், “எங்களுக்கு மயக்கமாக இருக்கிறது. வலி தாங்க முடியவில்லை. ரத்தம் அதிகமாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து தொலைபேசியில் ஆம்புலன்ஸை கூப்பிடுங்கள். எங்களுக்கு உயிர்ப்பிச்சை போடுங்கள்” என கெஞ்சினார். ஆனாலும் கல்நெஞ்சம் படைத்த பொதுமக்கள் அவர்களை காப்பாற்றாமல், தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
உடை முழுவதும் கிழிந்து, ரத்தம் வெளியேறிய நிலையில் 3 பேரும் சாலையில் சுமார் ஒன்றரை மணிநேரம் கிடந்தனர். விபத்தில் சிக்கியவர்களின் கதறலைக் கண்டு, அங்கு காரில் வந்த ஒருவர் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவில் இருந்த அரசு மருத்துவமனைக்கு 3 பேரையும் கொண்டு சென்றனர்.
மருத்துவர்கள் அவர்களை பரிசோதித்த போது ரமேஷ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த மகேஷ், மஞ்சுநாத் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இருவரும் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கிய 3 பேரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவர்களது உயிரை காப்பாற்றி இருக்கலாம். அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் 3 பேரின் உயிரையும் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய 3 பேரும் உயிருக்காக போராடி கதறும் வீடியோ காட்சி நேற்று ‘வாட்ஸ் அப்’-பில் வெளியானது. இந்தக் காட்சியை பார்த்த உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், “மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன். அங்கிருந்தவர்கள் மனித நேயத்துடன் செயல்பட்டிருந்தால், 3 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம்” என கூறியுள்ளார்.
இதனிடையே மோட்டார் சைக்கிள் மீது மோதிய அரசு பேருந்தின் ஓட்டுநர் நேற்று கைது செய்யப்பட்டார். ஓட்டுநரைப் போலவே ஆபத்தில் உதவாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக தளங்களில் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.