

கேரள சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சி உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
கேரளம், தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகளை தலைமை தேர்தல் ஆணையம் இன்னும் சில நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலை யில் கேரளாவில் வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினர் மும்முரமாக உள்ளனர்.
குறிப்பாக ஆளும் காங்கிரஸில் முதல்வர் உம்மன் சாண்டி, கட்சியின் மாநிலத் தலைவர் வி.எம்.சுதீரன், உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா ஆகியோர் மாவட்ட தலைவர்களை சந்தித்து வேட்பாளர்கள் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மாவட்டந்தோறும் காங்கிரஸ் துணைக் குழு அளித்துள்ள வேட் பாளர்கள் பட்டியலை இவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மாவட்ட துணைக் குழு அளித்துள்ள பட்டியலில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்து, இறுதிப் பட்டியலை கட்சி மேலிடத்துக்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்க கேரள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் காங்கிரஸ் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஆளும் ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்த நிலையில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கடந்த தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை அதை விட அதிக இடங்களை முஸ்லிம் லீக் கேட்கும் என்று தெரிகிறது. தவிர கடந்த தேர்தலில் 15 இடங்களில் போட்டியிட்ட கேரள காங்கிரஸ் (எம்), 6 இடங்களில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸை வலியுறுத்தி வருகின்றன. ஆர்எஸ்பி, கேசி-ஜே ஆகிய சிறிய கட்சிகளும் ஆளும் கூட்டணியில் உள்ளன. இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்து உம்மன் சாண்டி உட்பட கேரள காங்கிரஸ் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரஸ் தவிர முக்கிய எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர் களை தேர்வு செய்வதில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது. மார்க்சிஸ்ட் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மார்க்சிஸ்ட் சார்பில் 93 வயதாகும் அச்சுதானந்தன், பொலிட்பிரோ உறுப்பினர் பினராய் விஜயன் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடுவார்கள், இவர்கள் தலைமையில் தேர்தல் பிரச்சாரமும் நடத்தப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.
கட்சியின் பொதுச் செயலா ளர் சீதாராம் யெச்சூரி நேற்று முன்தினம் மாநில தலைவர் களுடன் திருவனந்தபுரத்தில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.