Published : 12 Nov 2021 10:24 PM
Last Updated : 12 Nov 2021 10:24 PM

கேரளாவை அச்சுறுத்தும் நோரோ வைரஸ்: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதார அமைச்சர்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் நோய் (Norovirus) தொற்றுப் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இந்நோய் தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நோரோ வைரஸ் குறித்து சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறியதாவது:

தற்காப்பு நடவடிக்கைகளாலும், ஒருவேளை நோய் பாதித்துவிட்டால் தகுந்த சிகிச்சையாலும் நோரோ வைரஸை வெல்லலாம். ஆகையால் மக்கள் இந்த வைரஸைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும்.

நோரோ வைரஸ் குடலில் நோயை ஏற்படுத்தக் கூடிய வைரஸ். இந்த நோய் தாக்கினால், வாந்தி, பேதி ஏற்படும். பொதுவாக ஆரோக்கியமாக இருப்போரை இந்த வகை வைரஸ் பாதிப்பதில்லை ஆனாலும், இது சற்றே நலிவுற்று இருக்கும் வளரிளம் குழந்தைகளையும், வயதானோரையும் பாதிக்கிறது. நோய் பாதித்தோருடன் நேரடி தொடர்பில் வருவதால் இந்த நோய் பரவக்கூடும்.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு வாந்தி, பேதி, குமட்டல், காய்ச்சல், தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது. வாந்தி, பேதியால் உடலில் நீர்ச்சத்து குறைகிறது. அதனால் அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்படலம். எனவே, நோய் பாதித்தால் மக்கள் வீட்டில் போதிய ஓய்வு எடுக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கூடவே ஓஆர்எஸ் சிரப்களையும் உட்கொள்ள வேண்டும்.

இந்த நோய் வராமல் இருக்க ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்னதாகவும் கைகளை சோப்பால் நன்கு கழுவவும். விலங்குகளிடம் பழகுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

க்ளோரினால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்தவும். வீட்டில் மற்ற பயன்பாடுகளுக்கும் க்ளோரின் சேர்த்த தண்ணீரையே பயன்படுத்தலாம். காய்கறி, பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.

கடல் மீன்கள் குறிப்பாக இறால், நண்டு போன்றவற்றை நன்றாக சமைத்து உண்ண வேண்டும். கெட்டுப்போன உணவையோ கடைகளில் வெளிப்புற மாசு படும் உணவையோ தவிர்க்க வேண்டும்.

நோய் பாதித்தாரின் மல, மூத்திரம் மூலம் இந்த நோய் பரவக்கூடும். கழிவறைகளின் சுத்தத்தை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x