

பாஜகவின் வெறுப்பு கொள்கை, காங்கிரஸ் கட்சியின் தேசியவாத கொள்கையை மறைத்து விட்டது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் தவறான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஜன ஜாக்ரண் என்ற பெயரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்படுகிறது. இதற்கான பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. இதில் ராகுல் காந்தியின் உரை காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது அவர் கூறியதாவது:
“நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் வெறுப்பு கொள்கை, காங்கிரஸ் கட்சியின் அன்பு, பாசம் மற்றும் தேசியவாத கொள்கையை மறைத்து விட்டது.
இதை நாம் ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். ஆனால் எங்கள் சித்தாந்தம் உயிருடன் இருக்கிறது, துடிப்பானது ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது.
இந்து மதம் மற்றும் இந்துத்துவா இவ்விரண்டுக்குமான வேறுபாடு என்ன? இரண்டும் ஒன்றுதானே என்று சிலர் நினைக்கிறார்கள். அப்படியானால் இரண்டுக்கும் ஒரே பெயர் வைத்தால் தான் என்ன. உண்மையில் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது.
இந்திய அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் சீனாவுடன் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சமரசம் செய்துள்ளது. இதனை மன்னிக்க முடியாது. நமது தேசத்தின் பாதுகாப்பு மன்னிக்க முடியாத அளவிற்கு சமரசம் செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் இந்திய அரசிடம் எந்தவொரு வியூகமும் இல்லை. அதே நேரத்தில் 56 நெஞ்சு கொண்டவர் அச்சப்பட்டுவிட்டார் போலும். இப்படி மனம் போன போக்கில் பொய்களை சொல்லி வரும் அரசை நம்பி, எல்லையில் நம் பாதுகாப்பிற்காக இரவு பகல் பார்க்காமல் பணியை கவனித்து வரும் எல்லை படை வீரர்களை பற்றிய நினைவுகள் தான் எனக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.