

தேசப் பிரிவினைக்கு காங்கிரஸும் அப்போது இருந்த அதன் தலைவர்கள்தான் காரணம் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களானார்கள். இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் சித்தாத்தத்துக்கு தடைவிதித்தார்’’ எனக் கூறினார்.
இந்திய சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து அகிலேஷ் யாதவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜின்னாவை தலைவராக கூறிய அகிலேஷ் யாதவுக்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்தார். இந்தநிலையில மீண்டும் ஜின்னா குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
வாரணாசியில் பேசிய சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ராஜ்பார்‘‘இந்தியாவின் முதல் பிரதமராக முகமது அலி ஜின்னா பதவியேற்றிருந்தால் இந்தியா பிரிந்து பாகிஸ்தான் என்ளற நாடு பிரிந்திருக்காது. இந்த வரலாற்று நிகழ்வுக்கு ஆர்எஸ்எஸ் தான் காரணம்’’ எனக் கூறினார்.
இதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி கடும் எதரிப்பு தெரிவித்துள்ளார். மொராதாபாத்தில் நடந்தக் கூட்டத்தில் அவர்பேசிய பேசியதாவது:
ஆர்எஸ்எஸ், பாஜகவினர், சமாஜ்வாதி கட்சியினர் வரலாறு படிக்காதவர்கள். அவர்களுக்கு நான் சவால் விடுகிறேன். தேசப் பிரிவினை முஸ்லிம்களால் நடக்கவில்லை, ஜின்னாவால் நடந்தது. அந்த நேரத்தில், நவாப்கள் அல்லது படித்து பட்டம் பெற்றவர்கள் போன்ற செல்வாக்கு உள்ள முஸ்லிம்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். தேசப் பிரிவினைக்கு காங்கிரஸும் அப்போது இருந்த அதன் தலைவர்கள்தான் காரணம்.
2022 உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சமாஜ்வாடி கட்சியும் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. உ.பி. தேர்தலை முன்னிட்டு ஜின்னா குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.