

கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்களில் நிறைய ஆபத்துகள் உள்ளன என்று முதலீட்டாளர்களை எச்சரிக்கை செய்துள்ளார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி உறுதித்தன்மை பார்வையில் இருந்து பார்க்கும்போது கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் கரன்சி வர்த்தகங்கள் தீவிர ஆபத்துகளைக் கொண்டதாக உள்ளன. வரலாற்றுஉச்சங்களை எட்டிய டிஜிட்டல் கரன்சிகள் தொடர்ந்து கடும் இறக்கங்களையும் சந்தித்து வருகின்றன. எனவே முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.
கடந்த ஆண்டு கிரிப்டோகரன்சி வர்த்தகம் தொடர்பாக ரிசர்வ்வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தின் மீதானதடையையும் நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுடிஜிட்டல் கரன்சி வர்த்தகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாகசிறு முதலீட்டாளர்கள் மத்தியில்மிகவும் பிரபலமாகி வருகிறது.பிட்காயின் உட்பட கிரிப்டோ கரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவருகின்றன.
இப்போது பிட்காயின் 67,089 டாலர் என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது. ஓராண்டில் 131 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த கிரிப்டோ முதலீடுகள் 3 லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. ஆனால் கிரிப்டோ வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசு இன்னும் இயற்றவில்லை. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த நிபுணர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. கிரிப்டோ வர்த்தகத்தில் ஏற்கெனவே பலகட்ட எச்சரிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில், அரசு தீவிர வரம்புகளை நிர்ணயிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில, கிரிப்டோ வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் கரோனா பாதிப்பு சவால்களை எல்லாம் சமாளித்து சிறப்பான நிலையில் இந்தியப் பொருளாதாரம் இருப்பதாகவும், போதுமான அந்நியசெலாவணி இருப்பு இருப்பதாகவும், முதலீடுகள், கடன் வளர்ச்சி ஆகியவை அடுத்த ஆண்டில் நல்ல முன்னேற்றம் அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.