Published : 12 Nov 2021 03:15 AM
Last Updated : 12 Nov 2021 03:15 AM

குஜராத் மாநிலத்தின் துவாரகா மாவட்டத்தில் ரூ.300 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 3 பேரை கைது செய்து போலீஸார் தீவிர விசாரணை

குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

கடல் வழியாக குஜராத் மாநிலத்துக்கு பெருமளவு போதைப் பொருள் கடத்தி வருவது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருளை குஜராத் துறைமுகத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி பலரை கைது செய்தனர்.

இந்நிலையில், குஜராத்தின் துவாரகா மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக சிறப்புப் படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கை குழு மற்றும் போலீஸார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ரூ.300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து துவாரகா மாவட்ட போலீஸார் நேற்று கூறியதாவது:

போதைப் பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம். அப்போது, சஜ்ஜத் கோஷி (44) என்பவர் ஆராதனா தாம் என்ற கோயில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் சிக்கினார். அவர் வைத்திருந்த பள்ளி புத்தகப் பை மற்றும் வேறு சில பைகளில் 6.618 கிலோ மெதாம்பீட்டாமைன், 11.483 கிலோ ஹெராயின் ஆகியவை 19 பாக்கெட்டுகளாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.88.25 கோடியாகும். இதையடுத்து சஜ்ஜத் கோஷி கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் உள்ள மும்ரா பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சஜ்ஜத், கடந்த 7-ம் தேதி தானேவில் இருந்து துவாரகா மாவட்டத்தின் கம்பாலியா பகுதிக்கு வந்து விடுதி அறை எடுத்து தங்கியுள்ளார். அதன்பிறகு 9-ம் தேதி போதைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தானே புறப்பட்டபோது போலீஸிடம் பிடிபட்டுள்ளார்.

அவர் அளித்த தகவலின்பேரில், குஜராத்தின் துவாரகா மாவட்டம் ஜாம்நகர் அருகில் உள்ள கடலோர நகரமான சலாயாவில் வசிக்கும் சலீம் யாகூப் கரா, அலி யாகூப் கரா ஆகிய சகோதர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்து 47 பாக்கெட் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றையும் சேர்த்து பிடிபட்ட போதைப் பொருட்களின் மதிப்பு ரூ.300 கோடிக்குமேல் இருக்கும். இதுகுறித்து தடயவியல் ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சகோதரர்களான சலீம், அலி ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இவ்வாறு போலீஸார் கூறினர்.

இதுகுறித்து ராஜ்கோட் ஐ.ஜி. சந்தீப் சிங் கூறியதாவது:

முதல்கட்ட விசாரணையில் கடல் வழியாக இந்த போதைப் பொருட்கள் குஜராத்துக்குள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. ஆனால், எந்த வழியாக கடத்தி வந்தனர், படகில் வந்தார்களா, எங்கிருந்து வந்தார்கள், இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது தெரியவில்லை. அதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

கைது செய்யப்பட்டுள்ள கோஷி ஏற்கெனவே கொலைக் குற்றத்துக்காக சிறை சென்றவர். அதேபோல் போதைப் பொருள் தடுப்பு, கள்ளநோட்டு, சட்ட விரோத ஆயுதங்கள் வைத்திருத்தல் போன்ற குற்றத்துக்காக சலீம் கரா பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். சலீம், அலி ஆகியோரிடம் போதைப் பொருளை வாங்கிக் கொண்டு மகாராஷ் டிராவுக்கு புறப்பட்ட போதுதான் சஜ்ஜத் பிடிபட்டுள்ளார். அந்த போதைப் பொருட் களை மகாராஷ்டிராவில் யாருக்காக கொண்டு சென்றார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு ஐ.ஜி. சந்தீப் சிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x