

ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடி உதவியாக தலா ரூ. 1,000 வழங்க முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.
கடந்த 4 நாட்களாகவே இப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பின.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணி முதல், தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் திருப்பதி, திருமலை, காளஹஸ்தி, போன்ற பகுதிகளில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. திருமலையில் பாபவிநாசம் சாலை மூடப்பட்டது. பக்தர்கள் மற்றும் பிற மக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. காளிகோபுரம் பகுதியில் 3 கடைகள் மீது பெரிய மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அலிபிரி-திருமலை நடைப்பாதையில் சில இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் மழை காரணமாக தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந் துள்ளன. மின்விநியோகம் பாதிக்கப் பட்டுள்ளது. சித்தூர் மற்றும் நெல்லூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங் களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர் ஜெகன் பேசும்போது, “தாழ்வான இடங் களில் வெள்ளம் அதிகரிக்கப்பதற்கு முன் அங்குள்ள மக்களை முகாம்களில் தங்க வையுங்கள். அத்தியாவசிய தேவைகளை தடையின்றி வழங்குங்கள். வீடு கள், உடைமைகள் இழந்துள்ள குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.1000 வழங்குங்கள். சாலை யில் விழுந்துள்ள மரங்களை அப்புறப்படுத்துதல், சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொள் ளுங்கள்” என உத்தரவிட்டார்.