கோவாவில் ராணுவ கண்காட்சி தொடக்கம்: ஆயுதங்கள் கொள்முதலுக்கான புதிய கொள்கையை வெளியிட்டார் பாரிக்கர்

கோவாவில்  ராணுவ கண்காட்சி தொடக்கம்: ஆயுதங்கள் கொள்முதலுக்கான புதிய கொள்கையை வெளியிட்டார் பாரிக்கர்
Updated on
1 min read

ராணுவ தளவாடங்கள் கொள்முதலுக்கான புதிய கொள்கையை, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று கோவாவில் வெளியிட்டார்.

கோவா தலைநகர் பனாஜியில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள பீடல் - நகுரேய் கிராமத்தில் சர்வதேச ராணுவ கண்காட்சி நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில், 47 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் ராணுவ தளவாடங்களை காட்சிக்கு வைத்துள்ளன.

கண்காட்சி தொடக்க விழாவில் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் பங்கேற்று, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் விதிமுறைகளை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

ராணுவ தளவாடங்கள் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை மற்றும் விரைவான கொள்முதலுக்கு புதிய கொள்கை உதவியாக இருக்கும். அத்துடன் இந்த புதிய நடைமுறைகள், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தையும் ஊக்குவித்து ஆயுதங்கள் விஷயத்தில் இறக்குமதியை நம்பியிருக்கும் நிலையை மாற்றும்.

இந்த நடைமுறைகள் பாதுகாப்பு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. இவை 15 நாட்களில் இணையதளத்தில் கிடைக்கும். ஆயுதங்கள் கொள்முதல் விஷயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் கூறியுள்ள சில யோசனைகள், கவலைகள் குறித்து 4 மாதங்களுக்குள் இறுதி முடிவெடுக்கப்படும்.

இந்த புதிய கொள்கையால், இந்தியாவில் வடிவமைத்தல், மேம்படுத்துதல், உற்பத்தி செய்தல் ஆகிய பிரிவுகளில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும். மேலும், பாதுகாப்புத் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தி இருக்கிறோம்.

ஆண்டுதோறும் தொழில்நுட்ப வளர்ச்சி மாறிக் கொண்டே இருக்கிறது. அதை ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் பயன்படுத்தி கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. இவ்வாறு பாரிக்கர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in