Published : 11 Nov 2021 06:14 PM
Last Updated : 11 Nov 2021 06:14 PM

2-வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத 12 கோடி பேர்: மன்சுக் மாண்டவியா கவலை

புதுடெல்லி

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதை வலுப்படுத்தும் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பாக மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பிரச்சாரத்தை வலுப்படுத்துவது குறித்து மாநில, யூனியன் பிரதேச சுகாதார அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்தினார்.

இதில் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கோவிட் மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டில் உள்ள தகுதியான குடிமக்கள் யாரும் பாதுகாப்பு கவசமான கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் இருந்து விடுபடக்கூடாது என்பதை நாம் அனைவரும் கூட்டாக இணைந்து உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் வீடு வீடாக சென்று, மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள நாம் ஊக்குவிக்க வேண்டும்.

தற்போது நாட்டில் உள்ள வயது வந்தோரில் 79 சதவீதம் பேர் முதல் தவணை கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 38 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 12 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள், இன்னும் 2வது தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தும் பிரசாரத்தில் தகுதியான மக்கள் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்வதையும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள், 2வது தவணை செலுத்திக் கொள்வதையும் ஊக்குவிக்க வேண்டும்.

பெரு நகரங்களில் பேருந்து, ரயில் நிலையங்கள், கோவிட் தடுப்பூசி மையங்களை அமைக்க வேண்டும். இங்கு மக்கள் அதிகளவில் வருவர். கொவிட் பெருந்தொற்று முடிந்துவிட்டதாக நாம் நினைக்க கூடாது. உலகம் முழுவதும் கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சிங்கப்பூர், இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனாவில் 80 சதவீதத்துக்கு அதிகமான தடுப்பூசிகள் செலுத்தியும், கோவிட் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கின்றன. கோவிட் தடுப்பூசி மற்றும் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாநிலங்களுக்கு தேவையான தடுப்பூசிகள் வழங்கப்படும். நாட்டில் கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை இல்லை. கோவிட்-19 தடுப்பூசி என்ற பாதுகாப்பு கவசத்துடன், கோவிட் தடுப்பு நடவடிக்கைகளையும் நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு மன்சுக் மாண்டவியா பேசினார்.

கோவிட் மேலாண்மைக்கு தடுப்பூசிகள், மருந்துகள், நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்குவதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் நன்றி தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x