

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அடுத்த வாரத்தில் மகரவிளக்கு, மண்டல பூஜை தொடங்க இருக்கும் நிலையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், கரோனாவுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு என தேவஸ்தான அதிகாரிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக வரும் 15-ம் தேதி நடை திறக்கப்பட உள்ளது. நவம்பர் 2-ம் தேதி சித்திரா விஷேசத்துக்காக திறக்கப்பட்டு 3-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது. ஆண்டுதோறும் வரும் இந்த சீசனுக்கு கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருவார்கள்.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து, அவர்கள் தரிசனத்துக்கு வரும் நாளில் 48 மணி நேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்தியிருத்தலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்க இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆன்லைனில் சாமி தரிசனத்துக்காக முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், கரோனாவுக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில் இந்த முன்பதிவு மிகக்குறைவு என்று தேவஸ்தான அதிகாரிகள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலை வருவாய் ரூ.21 கோடியாகக் குறைந்தது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு வருவாய், ரூ.270 கோடியாக இருந்தது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் தலைவர் என்.வாசு கூறுகையில், “ வழக்கமாக நாள்தோறும் 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் 30 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க இருக்கிறோம். கரோனா தொற்று மற்றும் சூழலைப் பொறுத்து பக்தர்கள் வருகை, தரிசனத்தில் தளர்வுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ரூ.600 கோடி இழப்பில் இருப்பதால், மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை சீசனைச் சிறப்பாக எதிர்கொள்ள கேரள அரசிடம் தேவஸ்தானம் சார்பில் நிதியுதவி கோரப்பட்டுள்ளது.
சபரிமலை சீசன் தொடங்குவதையடுத்து, நிலக்கல், சபரிமலை, பம்பா ஆகிய இடங்களில் தற்காலிகக் கடைகள், உணவுக்கூடங்கள் அமைக்க விடப்படும் ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவும். ஆனால், பக்தர்கள் இரவில் கோயிலில் தங்க தடை விதிக்கப்பட்டதால், கடைகளை ஏலத்தில் எடுக்க பலர் ஆர்வம் காட்டவில்லை. இதனால், ஏலத்தொகையும் குறைந்தது.