

முல்லைப் பெரியாறு பகுதியில் பேபி அணையை வலுப்படுத்த 15 மரங்களை வெட்டுதற்கு தமிழகத்துக்கு வழங்கிய அனுமதியை கேரளா ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்திறப்பு, பராமரிப்பு, கட்டுமானம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் தமிழக கட்டுப்பாட்டிலே உள்ளது.
1979-ம் ஆண்டு இருமாநிலங்களும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிலையில் அணையின் பலம், பாதுகாப்பு குறித்து கேரள அரசு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இப்பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றது.
இதனைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம், 142அடி வரை நீர்மட்டத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று தீர்ப்பளித்ததுடன் அணையை கண்காணிக்க மூவர் குழுவையும் நியமித்தது.
இருப்பினும் கேரளா இன்று வரை தொடர்ந்து அணை குறித்து பல்வேறு சர்ச்சைகளை கூறி நிர்ணயித்த அளவிற்கு நீரை உயர்த்த விடாமல் செய்து வருகிறது.
இதனால் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு 2014, 2015, 2018 என்று மூன்று முறை மட்டுமே 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டது.
இந்த ஆண்டு அதிகமழைப்பொழிவினால் நீர்வரத்தும் உயர்ந்து 138அடியை கடந்து 142 அடியை விரைவில் எட்டும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கேரளபகுதிக்கு இன்று காலை நீர் திறந்து விடப்பட்டது. பொதுவாக தேனி ஆட்சியர், தமிழக அமைச்சர்கள் நீரைத்திறப்பது வழக்கம். கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்பர்.
கடந்த 2018-ம் ஆண்டு 142அடியாக உயர்ந்த போது இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டது. ஆனால் இம்முறை இந்த மரபு மீறப்பட்டுள்ளது.
கேரள நீர்ப்பானத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்கள் ரோஷிஅகஸ்டின், கே.ராஜன் ஆகியோர் அணையில் இருந்து நீரைத் திறந்தனர்.
இந்தநிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைக்காக 15 மரங்களை வெட்ட கேரளாவிடம் அனுமதி கோரப்பட்டது. கேரளா தரப்பில் இருந்து பேபி அணையில் 15 மரங்களை வெட்ட தமிழகத்துக்கு அனுமதி அளித்து கடிதம் அனுப்பப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லெண்ண அடிப்படையில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.
ஆனால் தங்களை கேட்காமலேயே தமிழகத்துக்கு அனுமதி கொடுத்து வனத்துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பிவிட்டனர் என கேரளா அமைச்சர் சசீந்தரன் கூறினார். கேரளா சட்டப்பேரவையில் இந்த பிரச்சனை எழுப்பப்பட்டது.
அதனால் தமிழகத்துக்கு மரம் வெட்ட கொடுத்த அனுமதியை நிறுத்தி வைக்கிறோம் என்று கேரளா அறிவித்தது. இந்தநிலையில் முல்லை பெரியாறு அணைக்கு அருகில் உள்ள முதுமைத் தடுப்புச் சுவரை வலுப்படுத்தும் வகையில் குடிமராமத்து பணியை தொடங்க 15 மரங்களை வெட்டவும், கீழ்க்காடுகளை அகற்றவும் தமிழகத்திற்கு அனுமதி அளித்த உத்தரவை கேரள அரசு ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.