Published : 11 Nov 2021 12:46 PM
Last Updated : 11 Nov 2021 12:46 PM

மத்திய அரசின் தோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகள்; நவ.14 முதல் 29-ம் தேதி வரை தேசிய அளவில் போராட்டம்: காங்கிரஸ் முடிவு

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், திக்விஜய் சிங் பேட்டி அளித்த காட்சி.

புதுடெல்லி

மத்திய அரசின் தோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் பணவீக்கம் எவ்வாறு உயர்ந்துள்ளது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் வரும் 14-ம் தேதி முதல் 29-ம் தேதிவரை தேசிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கிராமங்களுக்குப் பாதயாத்திரையாக ஒருவாரம் சென்று தங்கியிருந்து மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விளக்கிக் கூற திட்டமிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஆகியோர் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தனர்.

அப்போது கே.சி.வேணுகோபால் கூறியதாவது:

''மோடி அரசின் தோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகள், அதனால் ஏற்பட்ட பணவீக்கம் ஆகியவை குறித்து மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறி விழிப்புணர்வு அடையச் செய்யும் வகையில் வரும் 14-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை தேசிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவாரம் பாதயாத்திரையாக கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தத் திட்டம் முதலில் அதிகாலை நடைபயணமாகத் தொடங்கி அதைத் தொடர்ந்து கிராமங்களைச் சுத்தப்படுத்தும் பணி நடக்கும்.

பாத யாத்திரையாகச் செல்லும் காங்கிரஸ் நிர்வாகிகள், கிராமங்களில் மக்களிடம் மத்திய அரசின் தோல்வி அடைந்த பொருளாதாரக் கொள்கைகள், பணவீக்கம், விலைவாசி உயர்வு, சாமானிய மக்களின் பிரச்சினைகளைக் கூறி விளக்குவார்கள். மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் இந்த தேசம் மிகுந்த வேதனையில் இருக்கிறது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக, நிலைமை மிகவும் மோசமடைந்து, பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. காய்கறிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 50 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை 50 சதவீதம் அதிகரித்து, ரூ.900-1000 எனக் கடந்த ஓராண்டில் அதிகரித்துள்ளது. பெட்ரோல் கடந்த 18 மாதங்களில் லிட்டருக்கு ரூ.34.38, டீசல் லிட்டருக்கு ரூ.24.38 என அதிகிரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

திக்விஜய் சிங் பேசுகையில், “பணவீக்கம் ஏழை மக்களை மட்டும் பாதிக்காமல் நடுத்தர வர்க்கத்தினரையும் பாதித்துள்ளது. உப்புக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்தினார். பெண்கள் ஏராளமாகப் பங்கேற்றார்கள். அதேபோல, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதித்துள்ளது. பணவீக்கம் ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. எங்கள் போராட்டம் பெண்களை மையப்படுத்தியிருக்கிறது. எங்கள் போராட்டத்தின் முதல் பகுதி இதுதான்.

வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்காக அடுத்தடுத்து போராட்டம் வரும். பெரும்பாலான போராட்டங்களில் காங்கிரஸார் உற்சாகமாகப் பங்கேற்கிறார்கள். ஆனால், மக்களைச் சென்றடையவில்லை. ஆதனால், மக்களை நோக்கி நாங்கள் செல்கிறோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x