Last Updated : 11 Nov, 2021 10:24 AM

 

Published : 11 Nov 2021 10:24 AM
Last Updated : 11 Nov 2021 10:24 AM

உ.பி. தேர்தல்: யாருடனும் கூட்டணி கிடையாது; மாயாவதி அறிவிப்பால் காங்கிரஸுக்கு பின்னடைவு

உத்தரப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என பகுஜன் சமாஜின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். இக்கட்சியுடன் கூட்டணி வைக்க முயலும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ராவிற்கு இந்த அறிவிப்பு பின்னடைவாகக் கருதப்படுகிறது.

அடுத்த வருடம் உ.பி.யின் சட்டப்பேரவைக்கு துவக்கத்திலேயே தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அம்மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் பிரச்சாரங்களை துவக்கி நடத்தி வருகின்றனர்.

இங்கு பலம் இழந்து காணப்படும் காங்கிரஸை தூக்கி நிறுத்தும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்காக, அக்கட்சியின் பொதுச்செயலாளரும் உ.பி. தேர்தல் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி தீவிரம் காட்டுகிறார்.

உபியின் மேற்குப்பகுதியில் அதிகமுள்ள ஜாட் சமூகத்தில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் பிரியங்கா பேசினார். இக்கட்சியுடன் காங்கிரஸுக்கு கூட்டணி வைக்க முடிவாகி உள்ளது.

இத்துடன் தலித் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பியையும் சேர்த்தால், பாஜகவை வலிமையுடன் எதிர்கொள்ளலாம் என பிரியங்கா கருதுகிறார். இதற்கான முயற்சியும் பிஎஸ்பி தலைவர் மாயாவதியுடன் செய்து வந்தார் பிரியங்கா.

இச்சூழலில் உ.பி. தேர்தலில் எவருடனும் கூட்டணி கிடையாது என மாயாவதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிஎஸ்பியின் முடிவால் பிரியங்காவின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உ.பி.யின் முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறும்போது, ‘பாஜகவும், சமாஜ்வாதியும் இந்து, முஸ்லிம் மதஅரசியல் செய்கின்றன. இந்த இருவரிடத்தில் எந்த வித்தியாசமும் இல்லை எனப் புரிந்துகொண்ட உபிவாசிகள் அவர்களை புறக்கணிப்பார்கள்.

எங்கள் கட்சி எவருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும். பொதுமக்களுடன் தான் எங்கள் கூட்டணி. இது நிரந்தரமானது.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் பின்னணியில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் இருப்பதாகக் கருதப்படுகிறது. அங்கு சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் மாயாவதி கூட்டணி வைக்க திட்டமிட்டுள்ளார்.

இவ்விருவரும் பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கு எதிராக அரசியல் செய்து வருகின்றனர். இதனால், உபியில் காங்கிரஸுடன் சேர மாயாவதி மறுத்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

பிஎஸ்பியின் தனித்து போட்டியால் உ.பி.யில் ஆளும் பாஜகவிற்கு பலன் கிடைக்கும். பாஜகவிற்கு எதிராக உள்ள சமாஜ்வாதி, பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் உ.பி.யில் நான்குமுனை போட்டி நிலைவும் வாய்ப்புகள் உள்ளன.

இதனால், எதிர்கட்சிகள் வாக்குகள் பிரிந்து ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் தெரிகின்றன. கடந்த 2017 தேர்தலில் பாஜக முதன்முறையாக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.

உ.பி.யில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 39.67 சதவிகித வாக்குகளுடன் பாஜக 312 இல் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி 47, பிஎஸ்பி 19 மற்றும் காங்கிரஸ் 6 தொகுதிகள் பெற்றிருந்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x