

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் இந்தியா 10-ம் இடத்தில் உள்ளது.
பிரிட்டனின் கிளாஸ்கோவில் பருவநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு நடைபெற்றுவரும் நிலையில் ஜெர்மன்வாட்ச் என்ற அமைப்பு உலக நாடுகளின்பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறியீட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியா தொடர்ந்து மூன்றாவது வருடமாக முதல் 10 இடங்களில் உள்ளது.
2022-ம் ஆண்டுக்கான அட்டவணையில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அளவுக்கு எந்த நாடும் சிறப்பாக செயல்படவில்லை என்பதால் முதல் மூன்று இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் இடத்தில் டென்மார்க் உள்ளது.
அட்டணையில் 10-ம் இடத்தில் இந்தியா உள்ளது. பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளில் 2014-ல் 31-ம் இடத்தில் இருந்த இந்தியா படிப்படியாக முன்னேறி 2019-ல் 9-ம் இடத்தை அடைந்தது. 2020-ல் 10-ம் இடத்தை அடைந்த நிலையில், கரோனா நெருக்கடி காலத்திலும் பருவநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைகளில் சமரசம் செய்துகொள்ளாததன் மூலம் 2021-ல் 10-ம் இடத்தை மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாட்டில் அதிகமாகப் பங்கு வகிக்கும் முதல் நாடாக உள்ள சீனா இந்த குறியீட்டு பட்டியலில் 37-ம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 33-ம் இடத்தில் இருந்த சீனா நான்கு இடங்கள் பின் தங்கியிருக்கிறது. மாசுபடுத்தலில் 2-ம் இடத்தில் உள்ள அமெரிக்கா இந்தப் பட்டியலில் 55-வது இடத்தில் உள்ளது.
உலகின் மொத்த ஜிஎஹ்ஜி வெளியீடுகளில் 75 சதவீதம் பங்குவகிக்கிற ஜி20 நாடுகளில் இப்பட்டியலில் இங்கிலாந்து 7-ம் இடத்திலும் இந்தியா 10-ம் இடத்திலும், ஜெர்மனி 13-ம் இடத்திலும் மற்றும் பிரான்ஸ் 17-வது இடத்திலும் உள்ளன. ஜி20 நாடுகளில் 11 நாடுகள் பட்டியலில் மிக மோசமான செயல்பாடு கொண்ட நாடுகளாக உள்ளன. அவற்றில் முதன்மையாக உள்ள சவுதி அரேபியா பட்டியலில் 63-ம் இடத்தில் உள்ளது.