Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறக்கூடாது: 8 நாடுகள் மண்டல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்

தீவிரவாதிகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறிவிடக்கூடாது என்று 8 நாடுகள் மண்டல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து, தலிபான்கள் அங்கு புதிதாக ஆட்சியை அமைத்துள்ளனர். தலிபான் ஆட்சியாளர்களுக்கு சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஒருசில நாடுகளே ஆதரவுதெரிவித்துள்ளன. இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு வழங்க வில்லை.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்துள்ள தலிபான்களால் ஆசிய கண்டத்தில் தீவிரவாத அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக உலகம் முழுவதும் கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் டெல்லியில் நேற்று 8 நாடுகளின் மண்டல பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா, ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் செயல்களை நாம் பார்த்து வருகிறோம். இந்த நேரத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்துவது இந்தியாவுக்கு கிடைத்த பாக்கியம் என்று கருதுகிறேன். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆப்கானிஸ்தான் வளர்ச்சிஅந்த நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆலோசனை, பிராந்திய நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான நேரம் ஆகும். ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்கும், மேம்படுத்துவதற்கும் அல்லது கூட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் எங்கள் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கூட்டத்தில், எந்தவொரு சூழலிலும் தீவிரவாதிகளின் புகலிடமாகவோ, பயிற்சி, திட்டமிடல் நடைபெறும் இடமாகவோ,இவற்றுக்கு நிதியுதவி அளிக்கும்நாடாகவோ ஆப்கானிஸ்தான் மாறிவிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆப்கனில் நடைபெறும் அனைத்துதீவிரவாத செயல்களுக்கும் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x