நாடு முழுவதும் 4 ஆண்டுகளில் சக வீரர்களால் 18 சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொலை: மன அழுத்தத்தைப் போக்க ஆலோசனை வழங்க முடிவு

நாடு முழுவதும் 4 ஆண்டுகளில் சக வீரர்களால் 18 சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொலை: மன அழுத்தத்தைப் போக்க ஆலோசனை வழங்க முடிவு
Updated on
1 min read

அண்மையில் சத்தீஸ்கரில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சக வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மன அழுத்தம் காரணமாக சிஆர்பிஎப் வீரர் ரீத்தேஷ் இந்தச் செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து சிஆர்பிஎப்படையில் மன அழுத்தத்துடன் பணியாற்றும் வீரர்ளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களது மனஇறுக்கத்தையும், மனச்சோர்வையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

நடப்பு ஆண்டில் மட்டும் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 5 வீரர்கள் மனச் சோர்வு காரணமாக 6 சக வீரர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 2019, 2020-ல் இதுபோன்ற 3 சம்பவங்களில் 10 பேரும், 2018-ல் இருவரும் சக வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளில் 13 சம்பவங்களில் 18 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பான சிஆர்பிஎப் நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

ஒவ்வொரு சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணங்களையும், அதற்கான தீர்வையும் சிஆர்பிஎப் ஆராய்ந்து வருவதாக துணை ராணுவப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஏறக்குறைய எல்லா சம்பவங்களிலும் சம்பவத்துக்குக் காரணமான வீரர், பணியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார்.

அதே நேரத்தில் சக வீரரால் இறந்த குடும்பங்களுக்கு இழப்பீடு, குடும்ப ஓய்வூதியம், கருணை அடிப்படையில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பணியின்போது மன அழுத்தத்துடனும், மனச் சோர்வுடனும் பணியாற்றுவதே அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபடக் காரணம் என்று தெரியவந்துள்ளது. குடும்பத்தை விட்டுபிரிந்து இருத்தல், அதிக அளவிலான பணி உள்ளிட்டவையே சிஆர்பிஎப் வீரர்களின் மன அழுத்தத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவர்களது மனச் சோர்வைப் போக்க அவர்களுக்கு மருத்துவ அடிப்படையிலான ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிஆர்பிஎப் டிஜி குல்தீப் சிங் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, “சக வீரர்களின் பிரச்சினைகளை கூடுமானவரை தீர்க்க அவர்களது உயர் அதிகாரிகள் முயல வேண்டும். அவர்களை திறந்த மனத்துடன் பேசவிட்டு அவர்களது பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in