

அரசு மருத்துமனையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் மாவட்ட ஆட்சியரின் மனைவி. இவரை போன்று அனைவரும் அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளி, கல்லூரிகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
தெலங்கானா மாநிலம், பத்ராத்ரி கொத்த கூடம் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் அனுதீப். இவரது மனைவி மாதவி. தனது மனைவி மாதவி 3 மாத கர்ப்பினியாக இருந்தது முதற்கொண்டு, பத்ராசலம் அரசு மருத்துவமனையில்தான் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், கடந்த செவ்வாய் கிழமை இரவு பிரசவ வலி அதிகமானதால், இரவு ஒரு மணியளவில் மாதவி பத்ராசலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு உடனடியாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். மாவட்ட ஆட்சியர் தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வளவு வசதி இருந்தும் அரசு மருத்துவமனையில் தனது மனைவியை அனுமதித்து பிரசவம் பார்த்துள்ள மாவட்ட ஆட்சியர் அனுதீப்புக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு பள்ளி, கல்லூரிகள் மீது அரசு அதிகாரிகளுக்கு நம்பிக்கை இருந்தால்தான் பொதுமக்களுக்கும் நம்பிக்கை ஏற்படும் என்பதை சொல்லாமல் சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர் அனுதீப்பை பலர் நேரிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகின்றனர்.