Published : 11 Nov 2021 03:07 AM
Last Updated : 11 Nov 2021 03:07 AM

திரிபுரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக 112 இடங்களில் போட்டியின்றி தேர்வு

திரிபுராவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அகர்தலா மாநகராட்சி (51 வார்டுகள்), 13 நகராட்சிகள் மற்றும் 6 நகர பஞ்சாயத்துகளில் உள்ள 334 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இம்மாநிலத்தில் 2018-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சித் தேர்தல் இதுவாகும்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் 36 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அம்பாசா, மோகன்பூர், ரானிர் பஜார், பிஷால்கர், உதய்பூர், சாந்திர் பஜார் ஆகிய 6 நகராட்சி கள் மற்றும் ஜிரானியா நகர பஞ்சாயத்தில் எதிர்க்கட்சி வேட் பாளர்கள் எவரும் களத்தில் இல்லை.

இந்நிலையில் 112 இடங்களில் ஆளும் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எஞ்சிய 222 இடங்களுக்கு வரும் 25-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இதனிடையே மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி கூறும்போது, “எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்பு மனுவை பாஜகவினர் வாபஸ் வாங்கச் செய்துள்ளனர். பாஜகவால் அடைக்கலம் அளிக்கப்படும் குண்டர்கள், எங்கள் தொண்டர்கள் பலரை தாக்கியுள்ளனர். 5 நகராட்சிகள் மற்றும் 2 நகர பஞ்சாயத்துகளில் எங்கள் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x