

தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் மீது, தெலங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய் சரமாரி குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் சந்திரசேகர ராவ் ஒரு பொய்யான அரசியலை நடத்தி வருகிறார் என்றும், விவசாய கடனை 3 ஆண்டுகளாக தள்ளுபடி செய்ய வில்லை என்றும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து விட்டது எனவும் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து நேற்றுமுன்தினம் ஹைதராபாத்தில் சந்திரசேகர ராவ் கூறியதாவது:
பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் தேவையின்றி அதிகமாக பேசி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இதுவரை 600 விவசாயிகள் இப்போராட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அப்படி இருக்கையில், விவசாயம் குறித்து பாஜகவினர் பேச என்ன தகுதி உள்ளது ? மத்திய அரசை விமர்சித்தால் தேச துரோகிகளா ? குடியரசு தலைவர் பதவிக்கும், மற்ற மசோதாக்கள் நிறைவேறவும் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த போது சந்திரசேகர ராவ் நல்லவன். ஆனால், மத்திய அரசை விமர்சித்தால் தேசத் துரோகி. பாஜக நியமித்த ஆளுநர் சத்யபால் மாலிக் மற்றும் அதே கட்சியை சேர்ந்த வருண் காந்தி போன்றவர்களே விவசாய சட்டங் கள் குறித்து கேள்வி எழுப்பினர். இவர்களும் தேசத் துரோகிகளா?
கர்நாடகா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் மக்கள் பாஜகவை புறக்கணித்தனர். ஆயினும் வீட்டின் பின்புறமாக சென்று குறுக்கு வழியில் ஆட்சி அமைத்தீர்கள். இதையெல்லாம் கேட்டால் தேசத் துரோகி என்பீர் கள். ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை வழங்குவோம் என மத்திய அரசு கூறியது. இதுவரை இது நடக்கவில்லை. ஆனால், நாங்கள் இதுவரை 1.35 லட்சம் அரசு வேலைகளை வழங்கினோம். மேலும் ஆண்டுக்கு இனி 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவும் திட்டமிட்டுள்ளோம்.
தெலங்கானா திட்டங்களை நாடாளுமன்றமும், ரிசர்வ் வங்கியும் கூட பெருமையாக பேசி உள்ளது. வரும் 12-ம் தேதி மாநிலம்முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக ஆளும் கட்சி ஆர்ப்பாட்டத்தில் இறங்க உள்ளது. மத்திய அரசு நெல் கொள்முதல் செய்யும் வரைஎங்கள் போராட்டம் ஓயாது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு SES எனப்படும் சமூக பொருளாதார நிலையை திரும்ப பெற வேண்டும் அதுவரை எங்களின் போராட்டம் ஓயாது. இவ்வாறு சந்திரசேகர ராவ் கூறினார்.