ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’

ஒரே நேரத்தில் 22 செயற்கைக்கோள்கள் செலுத்த திட்டம்: புதிய வரலாறு படைக்கிறது ‘இஸ்ரோ’
Updated on
1 min read

வரும் மே மாதம் ஒரே திட்டம் மூலம் 22 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுத இந்தியாவின் ‘இஸ்ரோ’ முடிவு செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையான ‘இஸ்ரோ’ வரும் மே மாதம் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் இந்தியாவின் கார்டோசாட் 2சி என்ற செயற்கைக்கோளை விண் ணில் செலுத்தவுள்ளது. அப்போது அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் 21 செயற்கைக்கோள் களையும் அந்த ராக்கெட்டுடன் இணைத்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ‘இஸ்ரோ’வின் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநர் கே.சிவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் மூலம் 22 செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். ஏற்கெனவே ஒரே திட்டம் மூலம் 10 செயற்கை கோள்களை அனுப்பி வைத்திருக் கிறோம். அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தற்போது எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி யுள்ளோம். இந்த திட்டமும் நிச்சயம் வெற்றி பெறும் என நம்புகிறோம்’’ என்றார்.

சென்னை அருகே ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள் வரும் மே மாதம் ஏவப்படும் என கூறப்படு கிறது. அப்போது இந்தோனேஷியா வின் ‘லபான் ஏ3’, ஜெர்மனியின் ‘பிரோஸ்’, அமெரிக்காவின் ‘ஸ்கை சாட் ஜென் 2-1’ உள்ளிட்ட நுண்ணிய மற்றும் நானோ செயற்கைக் கோள்கள் ஏவப்படவுள்ளன.

கடந்த 2013-ல் அமெரிக்காவின் நாசா ஒரே திட்டத்தில் 29 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்தது. இதற்கு அடுத்தபடியாக இந்தியா அந்த முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in