

பூஷன் ஸ்டீல், பூஷன் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் பொது நிதியை மோசடி செய்த வழக்கில் அவற்றின் முன்னாள் உரிமையாளர்களுக்கு சொந்த மான ரூ.61.38 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.
பூஷன் ஸ்டீல் மற்றும் பூஷன் எனர்ஜி உள்ளிட்ட நிறுவனங்களின் முன்னாள் உரிமையாளர்கள் நீரஜ் சிங்கால், பி.பி.சிங்கால் மீது நிதி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (எஸ்எஃப்ஐஓ) தாக்கல் செய்த புகாரின் பேரில், நிறுவன சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அமலாக்கத் துறை இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில் உரிமையாளர்கள் நீரஜ் சிங்கால், பி.பி.சிங்கால் இருவரும் பொது நிதியை முறைகேடாகக் கையாண்டு பரிவர்த்தனை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
பூஷன் எனர்ஜி நிறுவனம் மூலம் அவர்களின் துணை நிறுவனங்களுக்கு பாதுகாப்பற்ற கடன்கள் வழங்குவது மூலமாக இந்த நிதி மோசடி பரிவர்த்தனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்தி அசையா சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் இவர்களுக்குச் சொந்தமான ரூ.61.38 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளது. - பிடிஐ