

இந்திய அரசிடமிருந்து ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தைப் பெற இடைத்தரகருக்கு ரூ.65 கோடி லஞ்சம் வழங்கியதாக பிரான்ஸ் புலனாய்வு ஊடகம் தகவல் வெளியான நிலையில் இதனை குறிப்பிட்டு காங்கிரஸை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் என்றாலே கமிஷன் வேண்டும் என்பது தான் என பாஜக கூறியுள்ளது.
பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்திடம் இருந்து ரூ.59,000 கோடியில்36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016-ம் ஆண்டில்மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. கூடுதல் விலைக்கு விமானம் வாங்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
மேலும் விமானங்களின் உதிரி பாகங்களை தயாரிக்கும் ஒப்பந்தம், பொதுத்துறை நிறுவனத்துக்கு வழங்கப்படாமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த சூழலில் பிரான்ஸின் இணையதள புலனாய்வு ஊடகமான மீடியாபார்ட், ரஃபேல் ஒப்பந்தத்தைப் பெற இந்தியாவை சேர்ந்த இடைத்தரகருக்கு தஸ்ஸோநிறுவனம் லஞ்சம் வழங்கியிருப்பதாக கடந்த ஏப்ரலில் செய்தி வெளியிட்டது. இதுதொடர்பாக பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து மீடியாபார்ட் ஊடகம், கடந்த 7-ம் தேதி மீண்டும் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், “ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை பெற இடைத்தரகர் சூசேன் குப்தாவுக்கு ரூ.65 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டது. கடந்த 2004 முதல் 2013 வரையில் லஞ்ச பணம் கைமாறியுள்ளது.
இதுதொடர்பான ஆதாரங்கள் கடந்த 2018 அக்டோபரில் சிபிஐ,அமலாக்கத் துறைக்கு கிடைத்தது. ஆனால் இரு புலனாய்வு அமைப்புகளும் லஞ்ச விவகாரம்குறித்து விசாரணை நடத்தவில்லை” என்று தெரிவித்துள்ளது.
மீடியாபார்ட் சுட்டிக் காட்டியுள்ள இடைத்தரகர் சூசேன் குப்தா, அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
இந்த விவகாரத்தை எழுப்பி பாஜக தொடர்ந்து காங்கிரஸை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியதாவது:
ராகுல் காந்தி இத்தாலியில் இருந்து பதில் சொல்லட்டும். நீங்களும் உங்கள் கட்சியும் ஏன் இத்தனை ஆண்டுகளாக ரஃபேல் குறித்து பொய்களை பரப்ப முயற்சித்தீர்கள். 2007 முதல் 2012 வரை இவர்களது ஆட்சியில் கமிஷன் பணம் கொடுக்கப்பட்டது, அதில் ஒரு இடைத்தரகர் பெயர் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் என்றாலே கமிஷன் வேண்டும் என்பது தான். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா, ராபர்ட் வத்ரா, அனைவரும் எனக்கு கமிஷன் வேண்டும்' என்று கூறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.